பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

அவர்களிடையிலே காதலை உண்டாக்கி அருள்புரிந்தது என்று யாஸ்மி நம்பினாலும்கூட அவளுக்கு இந்தப் பெயர்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை.

“நீ நட்சத்திரங்களின் தன்மையை ஆராய்ந்து மற்றவர்களின் விதிப்போக்கை அறிவதற்குச் சோதிடம் பார்க்கத்தானே போகிறாய்! ஆகையால், இதற்கு “விண்மீன் வீடு” என்று பெயர் வைக்கலாம்” என்றாள் யாஸ்மி.

உமார் உன்னிப்பாக அவளைக் கவனித்தபடி “நான் சோதிடம் சொல்கிறேனா? யார் உனக்குச் சொன்னார்கள்?” என்று கேட்டான்.

“சுல்தான் மாலிக்ஷா அரசாட்சிக்கு வருவார் என்று சோதிடம் சொன்னது நீதானாமே?” உனக்கு எல்லாம் தெரியுமாமே... நிசாப்பூர் தெருக்கள் எல்லாம், இந்த நாடெல்லாம் தான் பேசிக் கொள்கிறார்கள்!” என்று யாஸ்மி சொன்னாள். ராஜாக்களின் விதியைக்கூட அறியும் ஆற்றல் உள்ளவன் அவன் என்பதில் யாஸ்மிக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் கோபுரத்தில் அவன் இடம் பிடித்தது கூட, சோதிடத்தின் மூலம் மக்களின் தலைவிதியை அறிந்து கொள்வதற்காகத்தான் என்றும் அவள் எண்ணினாள். வானநூல் ஆராய்ச்சி செய்பவன் சோதிடம் கூறுவதில் தேர்ச்சி பெறுவான் என்பது அவள் கொண்டிருந்த முடிவு ஆகும்.

“எனக்குத் தெரியும்! அதனாலென்ன?” என்று கேட்டான் உமார்.

“அதனால் என்னவா? அடுத்த மாதத்திற்குள்ளே நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் கருவிகள் எல்லாம் உனக்கு வந்துவிடும். நீயும் வேலை தொடங்கிவிடுவாய் பிறகு, பணம் நிறையக்கிடைக்கும் கிடைத்தவுடன் என் தந்தையிடம் வந்து எனக்குள்ள பெறுமதிப் பணத்தைக் கொடுத்துப் பெண் கேட்டாய், அதன்பிறகு நாம் மணக்கோலத்தில் சாட்சிகளின் முன்னே வீற்றிருப்போம்!”

நிசாமிடம் வாங்கிய பணம் முழுவதையும் பொருள்கள் வாங்குவதில் செலவழித்துவிட்டோமே. இல்லாவிட்டால், இப்பொழுதே பெண் கேட்டிருக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது உமாருக்கு.