பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடமும் இருக்கைகளும்

17


இதே முறையில் அமைந்த மற்ருெரு அட்டவணைப் பெட்டி ஒன்றுண்டு. ஆனால், அது நூலகத்தார் அறையில் மட்டுமே இருக்கும். எல்லோரும் அதனைப் பயன்படுத்த முடியாது. இங்கு அட்டைகள் நூல் அலமாரிகளின் முறைக்கும், நூல்கள் அலமாரித் தட்டுக்களில் அடுக்கப் பட்டிருக்கும் வரிசைக்கும் ஏற்பக் கோக்கப் பட்டிருக்கும். இவ்வாறு அமைக்கப்பட்ட அட்டவணைப் பெட்டிகளே ஆண்டிறுதியில் நூல்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும்.

நூல்களுக்கிருப்பது போலவே, பேசும்படங்கள், விளம்பரப் பலகைகள், இசைத்தட்டுக்கள் முதலியவற்றிற்கும் அட்டவணைப் பெட்டிகள் இருத்தல் வேண்டும்.

நாளிதழ்களுக்கென நாளிதழ்தாங்கிகள் உண்டு. பள்ளி நூலகத்துக்கு இரண்டுமுதல் நான்கு நாளிதழ் தாங்கிகள் தேவை. இந்தத் தாங்கிகள் அசையும் தாங்கிகள், அசையாத் தாங்கிகள் என இரண்டு வகைப்படும். முன்னவை தனியே இருப்பவை; பின்னவை சுவரில் பொருத்தப்பட்டவை.

நாளிதழ்களைவிட வார, மாத, கால, ஆண்டு வெளியீடுகள் குழந்தைகளால் அதிகமாக விரும்பிப் பல நாளுக்குப் படிக்கப்படும். எனவே அவற்றை நூலகத்தார் நன்கு கவனித்து வாங்கி வைக்கவேண்டும். அவற்றுக்கெனத் தனிப் பெஞ்சுகள் போட வேண்டும். படிக்கப்பட்ட பழைய வெளியீடுகளைத் தொகை செய்து வைக்கவேண்டும். ஏனெனில் அவை அடிக்கடி மாணவர்களால் வேண்டப்படும்.

நூல்களைக் காட்சிக்கு வைக்கவும் கொண்டு செல்லவும் பயன்படும் சிறுசிறு வண்டிகள் நூலகத்தில் இருத்தல் மிகவும் நல்லது.