பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4
உயிரின் தோற்றம்

கட்டுப்படுத்தி மாற்றியமைக்கலாம் என்ற நம்பிக்கையே, சோதனை அனுபவமுறை நமக்களிக்கிறது. உயிரை மனிதன் விஞ்ஞானமுறைகளின் மூலமாகவே அறியமுடியும் என்ற உண்மையை சமீபகாலத்தில் உயிர்நூல் விஞ்ஞானிகள் அடைந்துள்ள வெற்றிகள் மெய்ப்பிக்கின்றன. அவ்வெற்றிகளனைத்தும், கருத்துமுதல் வாதத்தின் தோல்விகளாகும். ஆனால் வெகுகாலமாக உயிர்களின் தோற்றத்துக்குக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியாமல் இருந்தது. அதுவே கருத்துமுதல் வாதிகளுக்குக் கொண்டாட்டமாயிருந்தது. பெண், குழந்தையைப் பெறுகிறாள்; பசு, கன்றை ஈன்றெடுக்கின்றது; கோழி குஞ்சு பொரிக்கிறது; மீன் சிறு முட்டையினின்றும் தோன்றுகிறது; செடிகள் அதே வகை செடியின் வித்தினின்றும் முளைக்கின்றன. உயிருள்ளயாவும் தன்னினத்திலுள்ள மற்றொன்றிலிருந்து தோன்றுவதை நாம் காண்கிறோம். எப்பொழுதும் இவ்வாறே தோன்றிக் கொண்டிருந்திருக்க முடியாது. நம்முடைய உலகத்துக்கு ஆரம்பகாலம் ஒன்றிருந்தது. பலவகையான செடிகொடிகளும், விலங்குகளும் முதன்முதல் எவ்வாறு உலகில் தோன்றின இக்கேள்விக்கு மதங்கள் கூறும் பதில் இதுதான் : எல்லா உயிரினங்களும் கடவுளின் படைப்பு. இன்று வாழும் எல்லா உயிரினங்களின் மூதாதைகளும் கடவுளால் இன்று அவை காணப்படும் நிலையில் உண்டாக்கப்பட்டன. ஆதி மனிதனும் அவ்வாறே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டான். ஆறு நாட்களில் கடவுள் உலகத்தையும் உலகிலுள்ள உயிருள்ளவையனைத்தையும் படைத்ததாக (யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வேதமான பைபிள் நூல்) கூறுகிறது. செடிகளை மூன்றாம் நாளும், மீனையும், பறவைகளையும், ஐந்தாம் நாளும், விலங்குகளை ஆறாம் நாளும், மனிதனை கடைசியாக கடவுள் படைத்தாரென்று அந்நூல் கூறுகிறது. முதலில் ஆணையும், அதன்பின் பெண்ணையும் படைத்தாராம்.