பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. வானமாமலை
7

உடலில் இயங்கும் ஆவி, "உயிர்ச்சத்து” என்பது என்று போதித்தனர். அவர்களுடைய ஆசிரியர் புளுடோனியஸ்தான் முதன்முதலில் “உயிர்ச்சத்து” என்ற சொல்லைத் தோற்றுவித்தார் என்று தோன்றுகிறது. இக்கருத்து இன்னும் சில பிற்போக்கு விஞ்ஞானிகளுக்கு உடன்பாடாகவேயுள்ளது. “உயிர் எப்படித் தோன்றியது!’ என்ற பிரச்சனைக்கு விடைகாண ஆதி கிறிஸ்தவர்கள் பைபிளின்துணையை நாடினர். எகிப்திய, பாபிலோனிய புராணக் கதைகளே, பைபிளில் காணப்படும் உலக சிருஷ்டிக் கதைக்கு ஆதாரம். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் மதாசிரியர்கள் இக்கதைகளை, புதிய பிளாட்டானியக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு உருமாற்றி எழுதிவைத்தார்கள். உலகில் உயிர் தோன்றிய விதம்பற்றி பைபிளில் காணப்படும் கதைகளுக்கு ஆதாரம் இதுதான். நான்காம்நூற்றாண்டில் வாழ்ந்த பேசில் என்னும் கிறிஸ்தவ பிஷப், உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்னும் கொள்கையை விளக்கும்போது கடவுளுடைய கட்டளையால் உலகமே புற்பூண்டுகள், மரங்கள், வெட்டுக்கிளிகள், பூச்சிகள், தவளைகள், பாம்புகள், எலிகள், பறவைகள் முதலியவற்றைப் பெற்றெடுத்தது என்று கூறினார். அந்தக் கட்டளையை உலகம் இன்றும் நிறைவேற்றி வருகிறதாம். அவர் காலத்தில் வாழ்ந்த அகஸ்டின் என்னும் மிகச் செல்வாக்கு வாய்ந்த கத்தோலிக்க மதாச்சாரியர் (உயிர்கள் திடீரென்று தோன்றுகின்றன என்ற கொள்கையை விளக்கினார்) கடவுளுடைய இச்சையினால் திடீரென்று உயிர் தோன்றுகிறது. செத்த சடத்தினுள் கடவுளின் உயிர் மூச்சு நிறைந்ததும் அது உயிர்ப் பிராணியாகிறது. கண்ணுக்குத் தெரிய உயிர்வித்துகள் சடத்தை ஆட்டி வைக்கின்றன. இவ்வாறு ஒரு கொள்கையை உருவாக்குகிற கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றவகையில் உயிரின் தோற்றத்தை அகஸ்டின் விளக்க முயன்றார். மத்திய காலம் (சுமார் 500 வருஷங்களுக்கு முன் வரை) முழுவதும் விஞ்ஞானத்துக்கு நேர்முரணான இக்கொள்கைகள்