பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

51


கடலினுள் உண்டான புரதப் பொருள்கள் என்ன ஆகியிருக்க வேண்டும் என்று கவனிக்கலாம். இப்பொருள்கள் தற்காலப் புரதங்களைப் போலவே பக்கவாட்டில் தொடர்களை உடையவை. அத்தொடர்களுக்குத் தனித்தனியான பண்புகள் உண்டு. மேல் வருணித்தபடி, புரதப் பொருள்களுக்குள் இணைப்பு உண்டாயிற்று. பல அணுக்கூட்டுகள் இணைந்து ‘கூட்டுக் குவிதல்’ தோன்றிற்று. பலவகையான புரதப் பொருள்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. சமுத்திரத்தில் குறிப்பிட்ட இடங்களில் கோயசர்வேட்துளிகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாயிற்று. அந்நிலைமைகள் கடலில் தோன்றின. இருவிதமான உயர்ந்த கூட்டணு எடையுள்ள சேதனப் பொருள்களின் கரைசல்களைச் சேர்த்தால் அவையுண்டாகுமென்று முன்னால் விவரித்தோம். அத்தகைய பல சேதனப் பொருள்களின் கரைசல்கள் கடலில் இருந்தமையால் யாரும் சேர்க்காமலேயே கோயசர்வேட்டுத் துளிகள் தோன்றின.

கடலில் பெருங்காயம் கரைத்ததுபோல் என்று சொல்வார்களே, அதுபோல மிகக் குறைந்த அளவு சேதனப் பொருள்கள் நீரில் கரைந்திருந்தபோதிலும், கோயசர்வேட் தோன்றுவது தடைபடவில்லை. இன்றும் கடலில், கடல் பிராணிகளின் உடல்கள் அழுகுவதால் மிகக் குறைந்த அளவிலேயே சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. அப்பொருள்கள் பெரும்பாலும் கடலிலுள்ள நூண்ணுயிர்களுக்கு இரையாகின்றன. சிறிதளவு சேதனப் பொருள்கள் கடலாழத்தில் நீரில் கலந்து கரைந்திருக்கின்றன. கடல் ஆழத்தில் கிடக்கும் சேற்றைச் சோதித்தால், கோந்து போன்ற பொருள்கள் கிடைக்கின்றன. சிக்கலான கோயசர்வேட்டுகள், மிகக் குறைந்த அளவு சேதனப் பொருள்கள் நீரில் இருந்தாலும் உண்டாகக்கூடும். அவை உண்டாக நுண்ணுயிர்களின் இடையீடு தேவையில்லை.

புரதங்களைப் போன்ற சேதனப் பொருள்களின் ரசாயன வினையால் கோயசர்வேட்டுகள் கடலில் தோன்றியிருக்க வேண்டும். உயிரின் தோற்றத்துக்கு அவசியமான இம் மாறுதல்கள் பொருள்களின் பரிணாம மாற்றத்தில் மிகவும் முக்கியமானது. அது தோன்றுமுன் சூழ்ந்திருக்கும் கரைசலோடு சேதனப் பொருள்கள் இரண்டறக் கலந்திருந்தன. சமமாக