பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உயிரின்தோற்றம்


வியாபித்திருந்தன. அணுக்கூட்டுகள் சிலவிடங்களில் குவிந்து சூழ்ந்திருக்கும் கரைசலினின்றும் வெளிப்பட்டு குறிப்பிட்ட வடிவத்தோடு இயங்கும் தன்மையே கோயசர்வேட்டுகளின் சிறப்புத்தன்மையாகும். ஒவ்வொரு கோயசர்வேட்டுத் துளிக்கும் தனித்தன்மையிருக்கிறது. சூழலிலிருந்து அது தனித்து நிற்கிறது. அப்படி நிற்பினும் அது சூழ்நிலையோடு உறவு கொண்டிருந்தது. இவ்வுறவு முரண்பாட்டு மாறுதல் உறவுகளாக இருந்தன. இந்தத் தன்மைதான் (Ciaelectical Unity) பூமியில் உயிர்கள் தோன்றி வளர்வதற்கான தீர்மானமான அம்சமாகும். சேதனப் பொருள்களுக்கு கோயசர்வேட் தோன்றிய பின்னரே குறிப்பிட்ட அமைப்பு உண்டாயிற்று. அது தோன்றுமுன் கரைசலில் கூட்டணுக்கள் பல்வேறு அசைவுகளை உடையனவாயிருந்தன. கோயசர்வேட் துளியில் இவ்வசைவுகள் ஒழுங்காயின. எனவே அமைப்பின் ஆரம்ப விஷயங்கள் தோன்றின. அந்த அமைப்பு வளர்ச்சி பெற்ற அமைப்பாக இல்லை என்பது உண்மையே. இம்மாறுதல்களைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்கால புரோட்டோ பிளாசம் என்னும் உயிர்ச்சத்தின் மாறுதல்களுக்கும் இவ்விதிகள் பொருந்தும். புரோட்டோபிளாசத்தின் உட்பொருள்களுக்கும் தமது கோயசர்வேட்டுகளின் உயிர் பொருள்களுக்கும் சில ஒருமைப்பாடுகள் உள்ளன.

மேற்கூறிய காரணங்களால் இத்துளிகளை (கோயசர்வேட் துளிகளை) உயிருள்ளனவென்று கருதலாமா? முடியாது. புரோட்டோபிளாசம் அல்லது உயிர்ச்சத்து இவற்றைவிட சிக்கலானதும் நுண்மையானதுமான அமைப்புடையது என்பது மட்டுமல்ல இயற்கையாகவோ, அல்லது செயற்கை முறையிலோ கிடைத்த கோயசர்வேட் துளிகள் குறிப்பிட்ட சூழ்நிலையில் உயிர் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை நடத்துமளவுக்குத் தகுதியான உள்ளமைப்பு உடையதாக இல்லை. அத்தகைய உள்ளமைப்பு புரோட்டோ பிளாசத்துக்கும், வேறு உயிருள்ளன எல்லாவற்றிற்கும் இருக்கிறது. இவ்வாறு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைவது ரசாயன விதிகளை மட்டும் பொறுத்ததல்ல. உயிர் வாழ்க்கை தோன்றியது முதல் பொருள்களின் பரிணாமத்தில் உயிர் நூல் விதிகளும் செயல்படத் தொடங்கின.