பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உயிரின் தோற்றம்


சேர்ந்தாற்போல் இதற்கு எதிரிடையான மாறுதலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. உயிருள்ளனவற்றிலுள்ள கூட்டுப் பொருள்களும் மாறாமல் நிலையாக இருப்பதில்லை. அவை சிதைகின்றன. அது மெதுவாக நடக்கலாம்; அல்லது விரைவாக நிகழலாம். புதிதாக உடலில் சீரணமாக பொருள்களை கிரகித்துக் கொண்டு, சிதைந்த பொருள்கள் நீக்கப்படுகின்றன. சூழலினுள் செலுத்தப்படுகின்றன.

உயிருள்ளனவற்றினுள்ளிருக்கும் பொருள்கள் மாறாமல் இருப்பதில்லை. அவை சிதைந்தும், புதிய பொருள்களால் ஈடுகட்டப்பட்டும் வருகின்றன. இத்தகைய ரசாயனக் கூட்டு மாறுதல்களும், சிதைவு மாறுதல்களும் இடைவிடாமல் நிகழ்கின்றன. அவை ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

ஒரு நீரோடையின் சலனத்துக்கு நமது உடலினுள் காணப்படும் இயக்கத்தை ஒப்பிடலாம் என்று புராதன கிரேக்கத் தத்துவ ஞானி ஹிராக்ளிடஸ் கூறினார். பல துளிகளின் இயக்கத்தின் இயக்கச் சமநிலையைத்தான் நாம் நீரோட்டமாகக் காண்கிறோம். அதுபோலவே பல நிகழ்ச்சிகளின் விளைவுகளின் முழுமையின் வெளித்தோற்றமே உயிர்ப்பிராணிகளின் வாழ்க்கை. அசேதனப் பொருள்களின் இயக்கத்தோடு இவற்றை ஒப்பிடக்கூடாது. நீரோட்டத்தில், நீர் அசைகிறது. குறிப்பிட்ட வேகத்தில் அணுக்கூட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதே நீரோட்டம். இவ்வியக்கத்தைத் தடைசெய்தால் நீரோட்டமும் நின்றுவிடும்.

ஒவ்வொரு பிராணியும் ஓர் இயங்கும் திட்டமே. சூழலிலிருந்து உட்கிரகிக்கப்படும் பொருள்கள் பல மாறுதல்களடைந்து உடலினுள்ளேயே, அதனை அமைக்கும் பொருள்களாக மாற்றப்படுகின்றன. உயிர்நிலை கொள்ளும் வரை பிராணிகளுள் இம்மாறுதல் நிகழுகிறது. சேதனப் பொருள்களின் பெளதீக மாற்றங்களுக்கும். இதற்கும் வேறுபாடு உண்டு. அது மேலே குறிப்பிடப்பட்டது. இந்த இடைவிடாத கூட்டு-சிதைவு