பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

69



ஒரு சேதனப் பொருள் கரைசலில் இரண்டறக் கரைந்திருக்கும்வரை (அதாவது புராதனக் கடலில்) பொருளைப் பற்றி முழுதாக ஆராய முடிந்தது. கோயசர்வேட் துளிகளாக அவை வெளிவரும்போது மிகவும் சிக்கலான தொடர்புகள் தோன்றுகின்றன. அவை எல்லை வளத்தால் சூழப்பட்டு தனித்தன்மை பெறுகின்றன. ஒரு துளிக்கும் மற்றொரு துளிக்கும் வேறுபாடு தோன்றுகிறது. ஒவ்வொருதுளிக்கும் தனிச்சரித்திரம் உண்டாகி விடுகிறது. அதன் வருங்காலம் சூழ்நிலைமைகளையும், துளியின் உள்ளமைப்பையும் பொறுத்தது. மற்றத் துளிகள் அவற்றின் உள்ளமைப்பில் சிறிதளவு ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.

குறிப்பிட்ட சூழ்நிலைமையில் ஒரு துளி நிலைப்பதை எவை நிர்ணயித்தன? அதிகமான கூட்டணு எடையுள்ள சேதனப் பொருள்கள் கரைந்திருக்கும் கடலில் ஒரு கோயசர்வேட் துளி இருப்பதை எண்ணிப் பாருங்கள். அது பல பொருள்களின் கரைசல்கள் கலப்பதால் உண்டாகின்றது. ஒவ்வொரு துளியின் வளர்ச்சிப் பாதையையும் கவனியுங்கள். உலகத்தின் புராதனக் கடலில் கோயசர்வேட் துளி, தண்ணீரில் மட்டுமல்லாமல், பல சேதனப் பொருள்கள் கரைந்த கரைசலில் மூழ்கியிருக்கிறது. இப்பொருள்கள் கரைந்திருக்கும் பொருள்களைக் கிரகித்துக்கொண்டு பல்வேறு ரசாயன நிகழ்ச்சிகளைத் தன்னுள் நிகழ்த்துகிறது. இதுதான் அத்துளியின் வளர்ச்சிக்கு காரணம். இக்கூட்டுதலைப் போலவே சிதைவு மாறுதலும் அத் துளியினுள் நிகழ்கின்றது. இவ்விரண்டு மாறுதல்களின் வேகங்களின் பரஸ்பரத் தொடர்பு சூழ்நிலைமைகளையும் (சீதோஷ்ண நிலை, அழுத்தம், சேதனப் பொருள்கள் கடலில் கரைந்திருக்கும் அளவு, உப்புகள், அமில அளவு முதலியன) துளியின் பெளதீக ரசாயன அமைப்பையும் பொறுத்துள்ளது. கூட்டு மாறுதல்களின் வேகங்களே இக்குழம்பு போன்ற அமைப்பின் வருங்காலத்தை நிர்ணயிக்கிறது. அவை பயனுள்ள மாறுதலாகவோ, அழிவுள்ள மாறுதலாகவோ, பரிணமிக்கலாம். துளி தோன்றுவதோ, நிலைத்திருப்பதோ, அழிந்துபோவதோ இவ் வேகங்களைப் பொறுத்துள்ளன.