பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைப்பு சிக்கலாகிறது. அப்பொழுது புதிய பண்புகள் பொருளுக்கு உண்டாகின்றன. இவ்வாறு அணுச்சேர்க்கையின் ஒரு கட்டத்தில் மிகவும் சிக்கலான அமைப்புள்ள துணுக்குகள் தோன்றின. அப்பொழுது பொருள்களிடத்துத் தோன்றிய பண்புதான் உயிர்.”

இவ்வாறு, உயிர் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விடையளிக்கிறார்கள். இவ்விடை காண்பதற்கு ஆதரவான சான்றுகளை உலகில் எல்லா நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் அளித்துள்ளார்கள். அவர்களுள் சிறந்த பங்கை ஆற்றியவர் ஓபாரின். இந்நூலின் ஆசிரியர். முப்பது வருஷங்களாக இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். அவருடைய கொள்கைகளின் சாரத்தை உலக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிகழ்ந்த சர்வதேசீய உயிர்-இயல் - விஞ்ஞானிகள் மகாநாட்டில் ஏற்றுக்கொண்டார்கள். அவருடைய கொள்கையை அவருடைய வாய்மொழியாகவே அறிந்துகொள்ள இந்நூல் வாய்ப்பளிக்கிறது.

நடுநடுவே விஞ்ஞானக் கருத்துகள் புரியாதிருப்பினும் முழுவதையும் படித்து மையமான கருத்தை அறிந்துகொள்ள வேண்டுமென வாசகர்களை வேண்டிக்கொள்கிறேன்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் வாக்கைப் பின்பற்றி சற்றே கடினமாயிருப்பினும் கருத்தை தமிழ்மக்கள் அறிந்து கொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தினால்தான் இந்நூலை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்மக்கள் இந்நூலை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

- நா. வானமாமலை