பக்கம்:உயிரில் கலந்தது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

என்பதுபற்றி ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றியும் 'அறநெறி’ என்பது குறித்து அண்ணல் காந்தியடிகளைக் குறித்தும் பேசினார். சிறுபிள்ளை நாட்களில் 'வாயில்லாப் பூச்சி'யாக விளங்கியவர் தம்முடைய பேச்சுத் திறனால் எவ்வளவு உள்ளங்களை வசப்படுத்திக்கொண்டு விட்டார்! சமுதாயத்தின் பொதுக் கண்னோட்டத்தில், பேச்சுத்தான் முதல் கவர்ச்சியாக பொது மக்கள் மனத்தில் பதிகிறது. அப்புறம்தான் எழுத்து.

“...சிருஷ்டித் தத்துவப் புதிரின் பிரதிநிதியாகத் தோன்றிய மனிதனின் பலத்துடனும் பலவீனத்துடனும் தோன்றிய காந்தி, அன்பின்பால் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையாலேயே 'மகாத்மா'வாக ஆக முடிந்தது!... சாதாரண மனிதர்களைப் போலவே அவரும் சிறுவயதில் காமக் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்த உண்மையை எவ்வளவு மனத் துணிவுடன் ஒப்புக்கொள்கிறார்!'மகாத்மா என்னும் பட்டத்தினால் ஒரு கணப் பொழுதாவது நான் பெறுமைப் பட்டுக் கொண்டதாக எனக்கு ஞாபகமில்லை' என்று பகிரங்கமான உள்ளத்துாய்மையுடன் அவரைப்போலச் சொல்லிக்கொள்ள வேறு யாரால் முடியும்? வங்காள மகாணத்தின் சிறு கிராமம் ஒன்றில் தக்ஷீணேசுவரர் ஆலயத்தில் அர்ச்சகராக வேலைபார்த்து வந்த ராமகிருஷ்ணர், அன்பின் முதிர்ச்சியால், குருவின் துணை இல்லாமலேயே பராசக்தியின் தரிசனத்தைப் பெற முடிந்ததை என்னவென்பது? உள்ளமே கோயில் என்றார் திருமூலர்.'தெய்வம் நீ என்றுணர்’ என்று வழிமொழிகிறார் பாரதி. ஆக, அவரவர்கள் செயல்களே அவரவர்களை உச்சத்தில் ஏற்றிவைக்கின்றன!...”

குறிப்பு நோட்டைப்புரட்டிய அவர் பார்வையில் இவ்விதமான சிந்தனை நயங்கள் சில புரண்டன. குறுமணலில் உடம்பைப் புரட்டிப் படுக்கும் மண்ணுளிப் பாம்பைப்போல ஞானசீலன் புரண்டு படுத்தார். அள்ளித் தெளித்த மணலின் அடிச்சுவடுகளென, அவரதுநெஞ்சில் கால்பாவி ஊன்றிநடந்து கொண்டிருந்த வாணியின் நினைவுகளைப் பற்றிக் கொண்டு அவரும் அதே மணல் பரப்பில் கை கோர்த்து, மனம் பின்னி