பக்கம்:உயிரில் கலந்தது.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

ஞானசீலன் இயந்திர கதியுடன் பதிலுக்கு வணங்கினார். ஆனால் அவரது உள்மனம், அன்றாெரு நாள் இதே பெரியவர் வந்து தம் அருமைத் திருமகளின் போட்டோவை நீட்டியதை நினைவு கூர்ந்த விவரத்தையும், அது சமயம் அப்படத்தைப் பார்த்த சடுதியில் தம் இலக்கிய நெஞ்சம் உள்ளூர அந்த அழகியின் அழகை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்த நடப்பையும் எண்ணமிடலானார். உண்மைதான். அன்று நான் கருதியது மெய்தான். இது மாதிரியான ஒர் அழகியை இதுவரை நான் கற்பனை செய்து பார்த்தது இல்லையே!... அப்படியானால் என் படைப்புத் தொழிலில் நான் தோற்றுத்தான் போய்விட் டேனா?... அதுவரை அனுபவித்துணர்ந்திராத ஏக்கமும், வேதனையும், சடனையும் அவர் மனத்தை நெகிழச் செய்தன.

ஞானசீலனுக்கு மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று துடிப்பு வந்தது; பார்த்தார். கமலாட்சியின் முகத்தில் வாணி தோன்றினாள். உலாவப் புறப்படுவற்குச் சற்று முன்னர்தாம் வாணியை அவர் வீட்டில் சந்தித்தார். ஏதோ ஒன்றைச் சொல்லத் தவிப்பது போலவும், பிறகு அத் தவிப்பு சமனம் ஆகிவிட்ட மாதிரி தன்னடக்கம் கொண்டவள் போலவும் அவள் நின்று, பின், திரும்பிவிட்டாள். இப்படிப் பட்ட இரண்டுங்கெட்ட கட்டத்தில் நின்ற வானியை நான்கைந்து சந்தர்ப்பங்களில் அவர் கண்டது உண்டு. ஒவ்வொரு முகக் குறியையும் மனோதத்துவத் தராசினால் எடை போட்டுப்பார்த்துக் கேட்பது என்பது நடக்கவல்ல காரியமா? அவ்வாறு கேட்பதுதான் நாகரீகமா?

கமலாட்சியைப் பார்த்தார். அதே காலப்பிரமாணத்தில் அவளும் அவரைப் பார்த்தாள். வாணியைப்போல இவளும் ஏதோ சொல்லத் துடித்ததாகவே அவர் உணரவேண்டியவர் ஆனார். இவளிடமும்தான் எப்படிக் கேட்பது?

காற்பெருவிரல் புழுதியில் நகக்கோலம் போட நின்றாள் கமலாட்சி.