பக்கம்:உயிரில் கலந்தது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

“ஸார், வாருங்கள், நம் வீட்டுக்குப் போவோம். வாசலில் வண்டி கிடைக்கும். போய்விடலாம்.” சொல்லும்போது உடம்பு புல்லரித்தது. ஆண்டவனின் சிருஷ்டி மேதா விலாசத்திற்கு ஒர் அத்தாட்சிபோல வந்து நின்று தரிசனம் தந்த அந்த அழகுத் தேவதையுடன் ஒரே வண்டியில் அமர்ந்து கொஞ்சப் பொழுது செல்ல நேரிட்டால்கூட, அதுவே தம் பாக்கியம் என்பது அவர் நினைவு; அது அவர் கனவுங்கூட!... வாணி ஒருத்தியைப்பற்றித்தான் அவர் இதுவரை தனிமையில் அமர்ந்து ஒரு தடவைக்கு மேலாக நினைத்து அகமகிழ்வது வழக்கம். ஆனால் இப்பொழுது கமலாட்சியைப்பற்றி ஏன் பலமுறை நினைக்கிறார்?

அடிப்படைக் குறைபாடுகளுடன் கூடிய மனிதனின் மனம் நேரம்—காலம் ஒன்றில்லாமல், சலனப்பட நேருவது இயல்பு.

ஞானசீலன் நண்பர்களிடம் சொல்விக்கொண்டார்.

அதற்குள், பெரியவர் திரும்பி ஞானசீலனை வெளியே கூப்பிட்டார். “மிஸ்டர் ஞானசீலன். இந்தாருங்கள் இன்விடேஷன். என் மகளுக்குக் கல்யாணம். விஜயபுரத்தில் மேரேஜ்: வைகாசி கடைசியில் தேதி, அவசியம் தங்கள் அம்மாவை அழைத்துக்கொண்டு வரவேண்டும்,” என்று சொல்லி முகூர்த்தப் பத்திரிகை ஒன்றையும் நீட்டினார்.

நடுங்கிய கரங்களை நீட்டிப் பெற்றார் ஞானசீலன். கண்களின் கலக்கத்தை அவளுக்கு உணர்த்த விரும்பாதவர்போல, கலங்கிய விழிகளால் அவளது அந்தப் பேசும் விழிகளைப் பார்த்து விட்டுத் திரும்பினர். “அவசியம் வருகிறேன்; நம் சொந்தத்தைக் கட்டிக் காக்க வேண்டுமென்பதுதான் என் கவலையெல்லாம்.”

தான் இதே பெண் கமலாட்சியை மணம் புரிந்துகொள்ள முடியாதென்றும், வாணிதான் தனக்கு இனி சகலமும் என்றும் அன்னைமூலம் செய்தி அனுப்பியவர். அல்லவா அவர்?...

“வீட்டுக்கு வந்து காப்பியாவது சாப்பிட்டுவிட்டுப் போனால்தான் எனக்கு மனசுக்கு ஆறுதலாக இருக்கும்.”