பக்கம்:உயிரில் கலந்தது.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வாரத்தில் அடிச்சுவடு பதித்திருந்தது. சலனத்தின் அலைகளில் நீந்தியவாறே அவள் வீட்டை அடைந்து நிலைப்படியில் கால் எடுத்து வைத்தார். அப்பொழுது, உள்ளே அம்மாவுடன் யாரோ பேசும் சத்தம் கேட்டது. குரலுக்கு உருவம் காண முனைந்தார். வாணியாகவே இருக்கும் என்று நம்பி, வாணியாக இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்கி, இத்தகைய இரண்டுங்கெட்ட நிலையில், அக்குரல் யாருடையது என்று அனுமானம் செய்ய எத்தனம் செய்தபோது, அவரது முயற்சிக்குக் குறுக்கே சில வாசகங்கள் தெறித்துச் சிதறின.

கோசலைஅம்மாள் சொன்னாள் :

“இப்ப எங்க பையன் எவ்வளவோ பரவாயில்லையே. முன்னாடி, அவரு இருக்கிறப்ப, இதைப் பார்த்தா எனக்கே சமயா சமயத்திலே கொஞ்சம் அருட்டிதான். ஏன்னா, சொல் பொறுக்காத தம்பி இது. 'ஊம்'னா போதும், மனசிக்குத் தப்பா பட்டதுன்னா போதும், வீடு குருக்ஷேத்ரம்தான், போங்களேன். சலனமும் சாந்தியும் தம்பிக்கு சர்வ சாதாரணம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்ட பிள்ளை இது. அவர் அப்ப தேசம் தேசம்னு பித்தாயிருந்தார். இது கதை கதைன்னு படிச்ச பட்டத்தை ஆலாப் பறக்க விட்டுப்புட்டு அவதிப்பட்டுக்கிட்டு இருக்குது. ஊம், எல்லாம் எங்க வாணி வந்திட்டால், சீலன் திருந்திடும் கட்டாயமாய்! வாழ்க்கை என்கிறது ஒரு யுத்தம்னு சொல்லுவாங்க. அதனாலேதான் போல நம்மளோட சுக துக்கத்துக்கு உண்டான அளவை வழங்கக்கூடிய ரேஷன் கார்டை பகவான் தன் வசம் வச்சுக்கிட்டிருக்கிறாரோ என்னமோ...?”

ஞானசீலன் நிலைப்படியைத் தாண்டினார். அதனால் மெல்லரவம் எழுந்தது.

“வாணி! அம்மாடி வாணி!” என்று குரல் கொடுத்தாள் அம்மா.

“நான்தான் அம்மா!" என்று நயமாகச் சொல்லிமுடித்து மாடிக்கு விரைந்தார். முற்றத்தில் விழுந்திருந்த பால் நிலவுக்