கற்பகம் எவ்வித முடிவுக்கும் வரமுடியாமல் முதலில் வருந்துகிறாள். அவள் தானே நேரில் தந்தையிடம் தன் காதலைத் தெரிவிப்பது, அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால், நடராஜனுடன் ஒடிப்போய் எங்கேனும் வாழ்வது, அதுவும் சாத்தியமில்லையானால் விஷமருந்தியோ, நீரில் மூழ்கியோ தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் எண்ணுகிறாள். ஆனால், முடிவில் இவள் நிதானமாகச் சிந்தித்து, தான் பிறந்த குடியின் பெருமையைக் காப்பாற்ற வேண்டித் தன் வாழ்க்கையைத் தங்தையின் விருப்பப்படி நடந்து தியாகஞ் செய்கிறாள்.
ஆனாலும் தன்னால் நடராஜன் அடைந்துள்ள உருக்குலைந்த நிலையைக் கண்டபோது கற்பகத்தின் உள்ளம் துடிதுடிக்கிறது. மண மண்டபத்தில் அவனைக் கண்டதும் மூர்ச்சையாகிறாள். நடராஜன் பதறிப்போய்த் தாங்கிக் கொள்கிறான். இதற்குப்பின் ஏற்பட்ட சந்திப்பில்தான் கற்பகம் இவனுக்குக் கடிதங்கள் எழுதிய விஷயம் தெரிகிறது. உடனே போய்க் கடிதங்களை எடுத்து படித்துப் பார்க்கிறான், கடிதங்களிலுள்ள வாசகங்கள் அவன் உள்ளத்தை உருக்கி விடுகின்றன.