பக்கம்:உயிரோவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5



மறு வீட்டு விருந்துக்குப் பின், நடராஜனும் கற்பகமும் மாளிகையின் பின்புறத் தோட்டத்தில் சந்தித்துப் பேசுவதையும், நடராஜன் கற்பகத்தை முத்தமிட்டுத் தழுவ விரும்புவதையும் கண்டு சந்திரசேகரன் ஆத்திரங் கொண்டாலும், பின்னர், தான் வேறோருவனுக்குக் கலியாணத்தால் உரியவளாகி விட்டபிறகு, தன்னை அவ்விதம் கேட்பது தகாது என்று அவள் புத்தி கூறுவ தையும், நடராஜன் தவறு உணர்ந்து மன்னிப்புக் கேட்பதையும், இருவருடைய மாசு மறுவற்ற காதலையும் நல்லொழுக்கத்தையும் அறிந்து அவன் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்ளுகிறான்.

ஆகவே, இத்தகைய காதலர்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்தக் கூடாதென்ற பெருந்தன்மையுடன், சந்திரசேகரன் கற்பகத்துக்கு விவாக விடுதலையுரிமையை மனமுவந்து வழங்குகிறான். அவளை நடராஜனுடன் வாழ்க்கை நடத்துமாறு கூறுகிறான். கற்புக்கரசியான கற்பகம் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கவில்லை. தன் மானத்தையும், குடும்ப கெளரவத்தையும் காப்பாற்ற வேண்டுமென்று அவள் மன்றாடுகிறாள். "விவாக விடுதலையளித்தாலும் தற்போதைய சமுதாய அமைப்பில், காதலன் நடராஜனுடன் நான் வாழ்க்கை நடத்துவதென்பது நன்றாயிராது; சமுதாய ஒழுங்குக்காகவே எங்கள் வாழ்க்கையைத் தியாகஞ் செய்துவிட்டோம்." என்று கற்பகம் தெரிவிக்கிறாள். இதற்குச் சந்திரசேகரன் என்ன சொல்லுகிறான்! கற்பகத்தின் நிலை என்ன?

கதை முடிவு என்ன ஆகிறது என்பதை மேடையில் கண்டு களியுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/7&oldid=1323368" இலிருந்து மீள்விக்கப்பட்டது