பக்கம்:உரிமைப் பெண்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

99

 இருவருக்கும் ஆஸ்திகி உண்டு. ஆனால் சொந்தமாக அவர்கள் விவசாயம் செய்வதில்லை. நிலங்களை எல்லாம் குத்தகைக்கு விட்டு விட்டுச் சுகமாகக் காலங் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல வருமானம் வருவதால் அவர்களுக்குக் குடும்ப நிர்வாக சம்பந்தமாக யாதொரு கவலையும் இல்லை.

கொடுமுடியைப்பற்றி அநேகமாகத் தமிழ்நாட்டார் அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரிக் கரையிலே அமைந்துள்ளது. அங்குத்தான் அவர்கள் இருவரும் தங்களுக்குப் பிதுசார்ச்சிதமாகக் கிடைத்த பழைய வீடுகளிலே வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

முதலில் இந்தக் காதல் பேச்சை ஆரம்பித்தவருக்கு ஒரு மகனுண்டு. அவனுக்கு ஒரு நல்ல செல்வர் விட்டிலே பெண் பார்த்துக் கல்யாணம் செய்துவிட வேண்டு மென்பது அவருடைய ஆசை. ஆனால் மகன் அவருடைய எண்ணத்திற்கு இணங்கவில்லை. அவன் யாரோ தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கிறான். தந்தை எவ்வளவு வற்புறுத்தியும் அவன் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டான். அதனால்தான் அவர் மனமுடைந்து தம் நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

“நம் அந்தஸ்துக்குத் தக்கபடி நல்ல குடும்பத்திலே கல்யாணம் செய்யவேண்டாமா?” என்றார் அவர்.

“நகை நட்டு, சீர் சிறப்பெல்லாம் தாராளமாகச் செய்கிற வீடாகப் பார்த்துத்தான் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யவேணும்” என்றார் அவர் நண்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/104&oldid=1138271" இலிருந்து மீள்விக்கப்பட்டது