பக்கம்:உரிமைப் பெண்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

105

 “இம்மாதிரிக் கடிதத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடிதத்திலிருந்து அவன் உள்ளக் கருத்து முழுவதையும் நான் புரிந்து கொள்ளவில்லை. படிப்புப் பூர்த்தியான பிறகு ஏதாவது உத்தியோகம் தேடிக்கொண்டு பிறகு கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று தான் நான் நினைத்தேன். அதனால் உடனே வேறொரு கடிதம் எழுதினேன். இந்த மாதிரி சம்பந்தம் பின்னால் கிடைக்காதென்றும், படிப்பைப் பூர்த்தி செய்வதற்குக் கல்யாணம் எந்த விதத்திலும் இடைஞ்சலாக இருக்கா தென்றும் எழுதினேன். அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரங்கசாமிக்கு வேண்டிய பணம் அனுப்புவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அதைக் குறித்தும் கடிதத்தில் தெளிவாக்கினேன். நான் படும் கஷ்டத்தைப் பற்றி நினைவுறுத்தினால் தடை சொல்லாமல் ஒத்துக்கொள்வான் என்பது எனது நம்பிக்கை. சில நாட்களில் அவனிடமிருந்து பதில் கிடைத்தது.”

இவ்வாறு சொல்லிவிட்டு மறுபடியும் அந்தக் கட்டில் தேடலானர். மகனிடமிருந்து வந்த இரண்டாவது கடிதத்தையும் எடுத்து நிதானமாகப் படித்தார்:

‘பிரியமுள்ள தந்தை அவர்களுக்கு,

தங்கள் அன்பு மைந்தன் ரங்கசாமி வணக்கத்துடன் எழுதிக்கொண்டது.

மறுபடியும் தாங்கள் கல்யாணத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நான் இதுவரையிலும் தங்கள் வார்த்தைக்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை யென்றாலும் இது விஷயத்தில் மறுப்புச் சொல்லவேண்டி நேர்ந்திருக்கிறது. அதற்காக என்னை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/110&oldid=1138280" இலிருந்து மீள்விக்கப்பட்டது