பக்கம்:உரிமைப் பெண்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

உரிமைப் பெண்

 கான் மனத்தைக் திடப்படுத்திக் கொண்டேன். கல்யாணத்தை அந்த விடுமுறையிலேயே வைத்து விட்டால் நல்லதென்று எனக்குப் பட்டது. சென்னைக்குப் போன பிறகு அவன் மனம் மாறிவிட்டால் என்ன செய்வதென்று எனக்குக் கவலை. பெண்ணின் தகப்பனாரிடம் என் எண்ணத்தைத் தெரிவிக்கவே அவரும் சந்தோஷமாகச் சம்மதித்து விட்டார். கல்யாணச் செலவையெல்லாம் அவரே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். பத்தாம் நாள் கல்யாணம் விமரிசையாக நடந்தேறியது.

கல்யாணம் ஆகி மூன்று நாள்தான் ரங்கசாமி ஊரில் தங்கியிருந்தான். அதற்குள் கல்லூரி திறந்துவிட்ட படியால் உடனே போகவேண்டுமென்று கூறினான். ஒரு வாரத்திற்காவது ரஜா வாங்கிக்கொள்ளுமாறு மாமனார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. மனைவியின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்த்தானோ இல்லையோ, புறப்பட்டுப் போய்விட்டான். படிப்பின் மேல் அக்கறையுள்ள பையனைத் தடுத்து நிறுத்த எனக்கு இஷ்டமில்லை. என் இஷ்டப் படியே கல்யாணம் முடிந்து விட்டதாகையால் மேலும் அவனைத் தடை செய்ய நான் எண்ணவில்லை.

“அவன் சென்ற சில நாட்களுக்குப் பிறகு பத்திரிகையிலே ஒரு துக்ககாமான செய்தி வெளியாயிற்று. நீங்க ளெல்லாம் அதைப் படித்திருக்கலாம். கல்லூரி மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதாக அதில் காணப்பட்டது. மறுநாளே ரங்கசாமியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் காகிதக் கட்டைப் பிரித்தார். அவர் கை நடுங்கியது; முகம் இருண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/117&oldid=1138387" இலிருந்து மீள்விக்கப்பட்டது