பக்கம்:உரிமைப் பெண்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமைப் பெண்

121

 யெல்லாம் அவளைத் துன்புறுத்தவில்லை. காளியப்பனுடைய புன்னகையில் அவை எரிந்துபோய்விட்டன. அவனுடைய அன்பு, அவனுடைய கட்டுறுதியுள்ள மேனி, அவனுடைய காதல் ஒளிரும் கண்கள்-இவைகளே அவளுக்கு உறுதிப் பொருள்களாகத் தோன்றின.

பூரணச்சந்திரன் நீல வானில் தண்ணமுதப் பொற்கலசம் போல மிதக்கும் ஒரிரவு. வெள்ளிக்கிரண மது மயக்கத்திலே உலகம் அறிவிழந்ததுபோலக் கிடக்கின்றது. பாவத்தாள் வீட்டுத் திண்ணையிலே பாயை விரித்துப் படுத்திருத்தாள். அவளையும் இந்த மயக்கம் தொட்டு விட்டது. அவளுக்குத் தாக்கம் பிடிக்கவில்லை. நெஞ்சத்திற்குள்ளே ஆயிரம் ஆயிரம் இளமைத் துடிப்புகள் ஒருங்கே குமுறிப் பொங்கின. மார்பகம் வெதும்பி விம்மிற்று. காளியப்பனுடன் இருக்கவேண்டுமென்று ஆசை பீறிக் கொண்டு எழுந்தது.

இதென்ன பேதைமை என்றாவது அவர்கள் இரவில் சந்தித்திருக்கிறார்களா? இல்லவே இல்லை. இன்றிரவாவது சந்திக்கலாமென்று ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்களா? அதுவும் இல்லை. பின் இவள் ஏன் புறப்படுகிறாள்? விரன்காட்டூரிலிருந்து அரை மைல் தொலைவில்தான் வேங்கை மாத்துப்பாளையம் இருக்கிறது. விரைவில் அங்குச் செல்ல முடியுமானலும் காளியப்பனை எப்படிச் சந்திப்பது!

அவளுக்கென்னவோ சந்திக்க முடியுமென்று ஒரே நம்பிக்கை. எழுந்து புறப்பட்டுவிட்டாள். தாய், அண்ணன் முதலியவர்கள் பகலெல்லாம் உழைத்த களைப்பினால் அயர்ந்து துாங்குகிறார்கள். பாவாத்தாள் ஊரைத் தாண்டி விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/126&oldid=1138428" இலிருந்து மீள்விக்கப்பட்டது