பக்கம்:உரிமைப் பெண்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

11

 தகப்பன் பதில் சொல்லுவதற்குச் சற்றுத் தயங்கினான். எப்படி ஆரம்பிப்பது என்று அவனுக்குத் தோன்றவில்லை. வேறு ஏதாவது விஷயமாக இருந்தால் அவனுக்குத் தயக்கமே இராது. அவன் இதுவரையில் தன் மகளிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை. அவன் மனைவி தன் நான்கு வயசுக் குழந்தையான ஒரே மகளை விட்டுவிட்டுத் திடீரென்று வாந்திபேதியால் இறந்தது முதல் வீரப்பனுக்கு அந்த மகள்தான் உயிர். அவன் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டான். அவனுடைய தங்கை மராயி வெகுநாள் வரையிலும் மன்றாடிப் பார்த்தாள்; அவன் இணங்கவில்லை. தன் குழந்தையின் மேலிருந்த அன்பினாலேயே அவன் அப்படி உறுதியாக இருக்கிறான் என்று அனைவரும் உணர்ந்துகொண்டனர்.

மனைவி இறந்த சில மாதங்கள் வரையில் அவன் தங்கை தன் கணவன் விட்டிலிருந்து வந்து அவனுடன் தங்கியிருந்தாள். உதவிக்கு அவளல்லாமல், வீரப்பனுக்கு, வேறு நெருங்கிய உறவினர்கள் இல்லை. மாராயியின் புருஷனும் தன் மைத்துனனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து அவளை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டான். ஆனால் அவள் எவ்வளவு காலம் இப்படி இருக்க முடியும்? அவளும் தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டாமா? அதனால் வீரப்பன் ஒருநாள் அவளிடம், மாராயி, நீ இங்கேயே இருந்தால் உன் வீட்டிலே மாமியாருக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். அவர்களும் வயசானவர்கள்; எத்தனை நாளுக்குத்தான் வீட்டு வேலையெல்லாம் தனி யாகச் செய்வார்கள்? நாங்கள் என்ன, இரண்டு சீவன்கள்தானே? எப்படியோ சமாளித்துக் கொள்கிருேம்,நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/16&oldid=1136751" இலிருந்து மீள்விக்கப்பட்டது