பக்கம்:உரிமைப் பெண்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

15

 சொல்லிக்கொண்டே மகள் கதவருகில் வந்தாள். அவளுக்கு இந்தக் கல்யாணப் பேச்சு முன்பே தெரியாததல்ல. யாரும் பெண்களிடம் அதைப்பற்றிக் கலந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்கு அதை நுட்பமாக அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. அத்தை மாராயி அடிக்கடி வருவதிலிருந்தும், உடன் பிறந்தவனுடன் தனியாகத் தாழ்ந்த குரலில் பேசுவதிலிருந்தும் அவள் விஷயத்தை அறிந்துகொண்டாள். அவளுக்குத் தன் அத்தை மகனை மணந்துகொள்வதில் விருப்பமில்லை. அவள் பழகியதெல்லாம் அவன் ஒருவனுடன்தான். வேறு இளைஞர்களுடன் அவள் அதிகமாகப் பேசியதுகூடக் கிடையாது. அவளுண்டு, அவள் வளர்த்த கடாரியுண்டு, வீட்டு வேலையுண்டு என்று இதுவரை இருந்து வந்தாள். என்றாலும் அத்தை மகனை மணப்பதற்கு அவள் உள்ளம் ஏனோ இடங்கொடுக்க வில்லை. அதைக் குறிப்பாகவாவது தன் தந்தைக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலோடிருந்தாள். இப்பொழுது அதற்குச் சமயம் வாய்த்துவிட்டதாக அவள் கருதினாள்.

“இப்போ விற்கப்படாதென்றுதான் எனக்கும் ஆசை. ஆனால் உன் அத்தை சும்மா அவசரப்படுத்துகிறாள்” என்று உட்கருத்தைப் பட்டும் படாததுமாக வீரப்பன் சொல்லி வைத்தான்.

“அத்தைக்கு வேலை என்ன?” என்று இதற்குப் பதில் சிறிது வெடுக்கென்று பிறந்தது.

என்னமோ சோசியன் சொல்லியிருக்கிறானாம். பையனுக்கு இந்த வருஷத்திலே நடக்காவிட்டால் பிறகு கல்யாணம் நடக்கவே நடக்காதாம். அதனால்தான் அவளுக்கு இத்தனை அவசரம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/20&oldid=1136757" இலிருந்து மீள்விக்கப்பட்டது