பக்கம்:உரிமைப் பெண்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உரிமைப் பெண்


வேண்டியிருந்தது. அதனால் தன் தோழியின் வீட்டுப் பக்கம் அவள் வரவில்லை. ஆனால் மூன்றாம் நாள் மாலையில் அவளுடன் இரண்டு வார்த்தையாகிலும் பேசிவிட்டுப் போகலாம் என்று வேகமாக வந்தாள். வந்தவளுக்கு வள்ளியாத்தாளின் கவலையெல்லாம் தெரிந்துவிட்டது. தன் வீட்டிற்கு வந்து முதலில் கொஞ்சமாவது சாப்பிடவேண்டும் என்று வற்புறத்தினாள். ஆனால் வள்ளியாத்தாள் இணங்கவில்லை. மூன்று நாளும் அவள் அடுப்பு மூட்டவில்லை.

“தினமும் சாப்பிட்டுச் சாப்பிட்டு என்ன கண்டு விட்டேன்? அப்படி இந்த உடம்பைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது?” என்று அவள் புலம்பினாள்.

“என்ன இருந்தாலும் இந்த ஆண் பிள்ளைகளுக்கு ஒன்றுமே தெரிகிறதில்லை” என்று குற்றம் சாட்டினாள் பாவாத்தாள்.

“அவர்களைச் சொல்லி என்ன செய்வது?” என்று பெருமூச்சு விட்டாள் மற்றவள்.

ஆமாம், ஆண்பிள்ளைகளுக்குத்தான் தெரியாதென்றால் பெண்கள் மாத்திரம் தெரிந்து கொள்ளுகிறார்களா? எங்கள் வீட்டிலே அம்மாளுந்தான் இருக்கிருள்.”

“பெண்ணாகப் பிறக்கவே படாது” என்று வள்ளியாத்தாள் முடிவு கட்டினாள்.

பாவாத்தாளுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. “பெரியப்பன் வந்ததும் அவரிடம் பேசட்டுமா? என்று அவள் கேட்டாள். ஆனால் அந்தக் கேள்வியின் பொருள் மனத்தில் பதியப் பதிய அவளுக்கே சந்தேகமும் திகிலும் ஏற்பட்டு விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/25&oldid=1137089" இலிருந்து மீள்விக்கப்பட்டது