பக்கம்:உரிமைப் பெண்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

23

 கடைசியிலே ஒருத்தன் குருடிமலைச் சாரலுக்குள்ளே ஒரு கடாரி கத்திக்கொண்டு ஒடினதாகச் சொன்னான். அங்கே போய்க் கல்லுக்குள்ளும் முள்ளுக்குள்ளும் புதர் புதராக அலைந்தேன். அப்படி அலைஞ்சாலும் பரவாயில்லை; கடாரி கிடைத்திருந்தால் எல்லோருக்கும் சந்தோஷமாய்ப் போயிருந்திருக்கும்”

“காட்டுக்குள்ளே என்னமாவது............?” என்று இழுத்து நிறுத்தினாள் பாவாத்தாள்.

“ஆமாம், பாவாத்தா கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தது போலக் கடாரியைப் புலிக்கு இறையாகக் கொடுத்துவிட்டேன். புலியடித்து அது கிடந்ததைப் பார்த்து எனக்கே பொறுக்க முடியவில்லை. அப்படியே ஒரு மூச்சு அழுதுவிட்டேன்” என்று தழுதழுத்த குரலில் வீரப்பன் முடித்தான்.

அப்பொழுதுதான் வள்ளியாத்தாள் பேச வாயெடுத்தாள். ஐயா, கடாரி போனால் போகிறது. அதற்காக மனத்திலே உங்களுக்குக் கவலை வேண்டாம். அது போனால் இன்னென்று வாங்கி வளர்த்தால் போகிறது. நான் சீக்கிரமாகச் சோறாக்குகிறேன்; சாப்பிடலாம்” என்று உற்சாகமாக அவள் சொன்னாள். தான் வளர்த்த கடாரியைப் புலி அடித்துவிட்டதே என்று அவளுக்குப் பெரிய வருத்தந்தான்; இருந்தாலும் அதைக் கீழே அழுத்திவிட்டு ஏதோ ஒரு விவரிக்க முடியாத இன்ப உணர்ச்சி மேலோங்கியது.

“சோறாக்கி அப்புறம் சாப்பிடுவானேன் ? இப்பொழுதே எங்கள் வீட்டிற்குப் போய்ச் சாப்பிடலாம், எழுந்திருங்கள்” என்று பாவாத்தாள் கலகலப்பான குரலிலே அழைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/28&oldid=1137139" இலிருந்து மீள்விக்கப்பட்டது