பக்கம்:உரிமைப் பெண்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சுக் காலன்

33

 தற்கும் சரியாக இருந்தது. உயிர் குடிக்க உறுதிகொண்டிருந்த விரோதிகள் நேருக்கு நேர் தனியாக எதிர்ப்பட்டு விட்டார்கள். சுந்தரம் புலியை ஊடுருவிப் பார்த்தான். புலியின் கண்கள் இவனை நோக்கி இரண்டு சுடர் விளக்கு களைப்போல் ஜொலித்தன. அந்தப் பார்வையிலே குரூரமும் ரத்த வெறியும் கலந்திருந்தன. பஞ்சுக்காலன் அவன் மேலே பாய்வதற்குத் தயாராயிற்று. உடம்பெல்லாம் அதற்கேற்றபடி முறுக்கேறியது. அதன் நுனிவால் படம் எடுத்த நாகம்போலச் சுருண்டு நெளிந்தது. சுந்தரத்திற்கு அந்த நிலைமையின் நெருக்கடியும் ஆபத்தும் தெரியாமலில்லை. ஆனால் அவன் அசையாமல் கல் துாண் போலக் கிடந்தான். நெஞ்சின் மேலே கிடக்கும் வலது கையை நகர்த்திப் பக்கத்திலே உள்ள துப்பாக்கியை எடுக்க அவன் நினைக்கவில்லை.

அப்படிச் செய்வது உயிருக்கு ஆபத்து என்பதை அவன் அறிவான். அசையாமலிருந்துகொண்டு நேராகப் பார்வையைத் தன்மேல் செலுத்தும் மனிதனைத் தாக்கப் புலி பயப்படுகிறது. பார்வை கொஞ்சம் விலகினாலோ, உடம்பில் அசைவு ஏற்பட்டாலோ உடனே அது பாய்ந்து விடும். பார்வையை வேறு பக்கம் திருப்பினால் கவனம் வேறு இடத்தில் சென்றுவிட்டதென்று அது புரிந்து கொள்ளுகிறது. உடம்பில் அசைவு ஏற்பட்டாலோ அதன் மூலம் தனக்கு ஆபத்து வருமென்று அதன் இயல்பு உணர்ச்சி துாண்டுவதால் அது பயத்தால் பிறக்கும் துணிச்சலோடு எதிரியைத் தாக்க முயலுகிறது. இந்த இரு வகையான விபத்துக்களிலிருந்தும் தப்புவதற்குச் சுந்தரம் அசையாமல் படுத்துப் பஞ்சுக்காலனேயே உற்று நோக்கியிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/38&oldid=1137193" இலிருந்து மீள்விக்கப்பட்டது