பக்கம்:உரிமைப் பெண்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகவுரை

கதைக்குக் காலில்லை என்று கூறுவார்கள். நான் இதை ஒப்புக்கொள்ளுவதில்லை. கதைக்கு நல்ல உறுதியான இரண்டு கால்கள் இருக்கவேண்டும். கவர்ச்சியான சம்பவம் அல்லது உணர்ச்சி, சொல்லும் திறமை ஆகிய இவ்விரு கால்களும் இல்லாமல் மக்களின் உள்ளத்திலே கதை நிலைத்து கிற்க முடியாது.

கதைக்கு வேறு இலக்கணங்கள் வேண்டாமா? நான் வேண்டாமென்று சொல்லவில்லை; நிச்சயமாக வேண்டும்; ஆனால் அவற்றை வரையறுக்கும்போதுதான் பல சங்கடங்கள் தோன்றுகின்றன.

சிறுகதை இலக்கணம்பற்றிய ஒர் ஆங்கில நூலைச் சமீபத்திலே நான் படித்துக்கொண்டிருந்தேன். அதிலே சிறுகதையின் இலக்கணத்தை ஆசிரியர் மிக அழகாக வகுத்துக் கூறுகிறார். அவருக்குத் தெரிந்தது போல அவ்வளவு தெளிவாக வேறு யாருக்கும் சிறுகதையின் இலக்கணம் தெரியாதென்றே சொல்லிவிடலாம். கதையை எப்படி ஆரம்பிப்பது, படிப்பவரின் ஆர்வம் ஓங்கும் படி எப்படிச் சொல்லுவது, எப்படி முடிப்பது என்பன போன்ற கலைத் திறமைகளைப்பற்றி யெல்லாம் மிக நன்றாக விளக்கியிருக்கிறர். இருந்தாலும் அந்த ஆசிரியர் ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. எப்பொழுதாவது சிறுகதை எழுத முயன்றாரோ என்று கூடத் தெரியாது. அப்படி எழுத முயன்றிருந்தாலும் அதில் வெற்றி பெற்றிருப்பாரோ என்பதும் சந்தேகந்தான். இலக்கணம் வகுப்பது ஒருவகைத் திறமை, சிறுகதை எழுதுவது மற்றொருவகைத் திறமை. இவ்வாறே மற்ற கலைகளைப் பற்றியும் கூறலாம்.

இன்னும் ஒரு விஷயம். பண்டிதர்களும், ரசிகர்களும் கூடிப் பல சிறந்த சிறுகதைகளை ஆராய்ந்து சிறுகதைக்கு இலக்கணம் வகுப்பார்கள். அடுத்த நாளிலே புதிதாக ஒருவன் எங்கிருந்தோ தோன்றுவான். அவன் இவர்கள் வகுத்த இலக்கணத்திற்கு நேர்மாறன முறையிலே அற்புதமான ஒரு சிறுகதை உண்டாக்கி விடுவான். எல்லாக் கலைகளிலும் இவ்வாறு நேரிடுகிறது.

இதனாலேதான் இலக்கணத்தை முடிவாக வரையறுப்பதில் பல சங்கடங்கள் தோன்றுகின்றன என்று கூறினேன். இருந்தாலும் சிறந்த கலைஞர்களின் சிருஷ்டிகளை ஆய்ந்து இலக்கணத்தை அமைத்துக் கொண்டே செல்வது அவசியந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/4&oldid=1136578" இலிருந்து மீள்விக்கப்பட்டது