பக்கம்:உரிமைப் பெண்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உரிமைப் பெண்

 அவர்தான் என்னை உல்லாச சபையில் அங்கத்தினராகச் சேரும்படி செய்தவர். வாரத்திற்கு ஒருமுறை அந்தச் சபை சனிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் கூடும். தேநீா் அருந்திக்கொண்டே உல்லாசமாகப் பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். ஒரு சனிக் கிழமையன்று எப்படியோ இதே கேள்வி எழுந்தது. சிலருக்கு உயிரைவிடக் கலை பெரியது என்று ஒருவர் சொன்னார். அதற்கு உதாரணமாக அவர் ஒரு வரலாற்றை எடுத்துக் காட்டினர்.

“பாரிஸ் நகரத்திலே ஒரு சிற்பி இருந்தானாம். ஏதோ ஒரு சந்திலே ஒரு சின்ன அறையிலே இருந்து கொண்டு சலவைக் கல்லில் அவன் ஒர் அழகிய இளமங்கையின் வடிவத்தைச் செதுக்கிக்கொண்டிருந்தான். அவன் அதில் ஈடுபட்டுப் பல நாட்களாகிவிட்டன. அவனுக்கு வேறென்றைப் பற்றியும் ஞாபகம் இல்லை. சிற்பம் எப்பொழுது முடியும், எப்பொழுது அதைப் பார்க்கலாம் என்று சிலர் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிற்பி ஏதோ ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாள் காலையிலே வந்தால் பார்க்கலாம் என்று சொன்னான். குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் மாலையில் நெடுநேரம் வரை அவன் அந்தச் சிலைக்கு முடிப்புக் கோலமும் நயனமோக்கமும் செய்துகொண்டிருந்தான். பொழுது மறைந்து இருளும் சூழ்ந்துகொண்டது. அப்பொழுதும் அவன் ஒரு சிறிய கைவிளக்கின் வெளிச்சத்திலே வேலை செய்தான், ஒவ்வோர் அங்கமாகக் கவனித்து அதைக் கூர்ந்து நோக்கிச் சிறு சிறு மாறுதல் செய்தான். கடைசியில் இரவு பத்துப் பதினொரு மணிக்கு அவனுக்கு ஒருவாறு திருப்தி உண்டாயிற்று. தன் பணி முடிந்ததென்று பெருமகிழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/45&oldid=1137232" இலிருந்து மீள்விக்கப்பட்டது