பக்கம்:உரிமைப் பெண்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

41

 யோடு படுத்துறங்கப் போனன். அந்தச் சமயத்தில் உறைபனி பெய்யத் தொடங்கிற்று. பாரிஸ் நகரமல்லவா? சில சமயங்களில் அங்கு உறைபனி பெய்யும். குளிரின் கடுமையும் மிக அதிகரித்தது. ஜலம் பனிக்கட்டியாக மாறியது. அக்கடுங் குளிரிலே சலவைக் கற்சிலையைத் திறந்து வைத்திருந்தால் அதில் கீறல்கள் விழுந்து கெட்டுப் போகும். அதற்கு என்ன செய்வது என்று அவன் கவலை கொண்டான். அவனுடைய சிறிய அறையிலே கணப்புக் கிடையாது. ஏழையாகிய அவனுக்குக் கரி வாங்கிக் கணப்பு மூட்டக் காசு ஏது? அவனுடைய உடம்பைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரே ஒரு நீண்ட கம்பளிச் சட்டை தான் உண்டு. அதைத் தன் உடம்பிலிருந்து களைந்து சிலையைப் பத்திரமாகப் போர்த்தினான். அவனுக்கு மனசிலே ஆறுதல் ஏற்பட்டது. சந்தோஷமாகச் சிலையின் பாதத்தருகில் படுத்துக்கொண்டு துாங்கலானன்.

“மறுநாள் காலையில் அந்த அற்புதச் சிற்பத்தைக் காணப் பலர் வந்தனர். உயிர் பெற்ற பாவைபோலச் சிலை அழகின் பிழம்பாய் நின்றது. ஆனால் அதை உருவாக்கிய சிற்பியோ உயிரற்ற பிணமாய்க் கிடந்தான். வறுமையால் வாடி, மெலிந்த அவனுடைய உடல் குளிர் தாங்காது விறைத்துப் போய்விட்டது. அந்தச் சிற்பிக்குத் தன் உயிரைவிடக் கலைதான் பெரியதாகத் தோன்றிற்று என்றார் அவர்.

“அவன் ஒரு முட்டாள் என்றார் நடராஜ பிள்ளை.”

“மற்றொருவர் ஆரம்பித்தார் : உயிரைவிடக் கொள்கைகளைப் பெரிதாக மதிப்பவர் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி தமது கொள்கைக்காக உயிரை விடக் தயாராக இருக்கவில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/46&oldid=1137236" இலிருந்து மீள்விக்கப்பட்டது