பக்கம்:உரிமைப் பெண்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 சிறுகதையின் கண், காது, மூக்கு என்றிப்படிப்பட்ட உறுப்புக்களின் இலக்கணத்தை அறுதியிட்டுக் கூறுவதிலே சங்கடங்கள் இருந்தாலும் அதன் கால்களைப்பற்றி நிச்சயமாகக் கூறிவிடலாம். அதனால்தான் கதைக்குக் காலில்லை என்ற பேச்சை நான் ஒப்புக் கொள்ளுவதில்லை.

வாழ்க்கையின் சில அம்சங்களைப்பற்றியே திருப்பித் திருப்பிக் கதை எழுதுகிறார்களென்று சிலர் குறைகூறுகிறார்கள். அப்படிப் புதிய துறைகள் வேண்டுமென்பவர்களுக்கு இந்தத் தொகுப்பிலே கிராம மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைகள், விலங்குக் கதைகள், அடிமனக் கோளாறுகள் பற்றிய கதைகள் என்றிப்படிப் பல சிறுகதைகள், இருக்கின்றன.

மனம் என்பது நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான கொடை. அதன் அமைப்பை முற்றிலும் அறிந்து கொள்வது மிகவும் சிரமமென்றாலும் பொதுவாக அதை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். மேலே உள்ள பாகம் சாதாரணமாக வாழ்க்கையிலே தொழில்படுவது. அதன் இயக்கத்தின்படியே நமது செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால் அதையும் பிடித்து ஆட்டிவைப்பது மனத்தின் மற்றொரு பாகமாகிய அடிமனம். அது மகா பொல்லாதது. அதன் கோளாறுகளை இன்று பல மனத் தத்துவர்கள் அறிந்து கூற முயன்றுகொண்டிருக்கிறார்கள். அடி மனத்தின் சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய இலக்கியமும் மற்றக் கலைகளும் இன்று வளரத் தொடங்கியுள்ளன.

முகவுரை எழுதவந்த இடத்திலே இவற்றைப்பற்றியெல்லாம் விரித்துச் சொல்லி உங்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்த முகவுரையை நீங்கள் படிக்க வேண்டியதே இல்லை. கதைகள் தாமாகவே பேசும்; பேச வேண்டும். அவற்றிற்கு முகவுரை எதற்கு? புதிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பல கதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும், உரிமைப் பெண்ணின் கதையைக் கூறுகிற அந்தக் கற்பனை எழுத்தாளன் சிறுகதை இலக்கணம் பற்றி எல்லோரையும் சிந்திக்கும்படி செய்கிறான் என்பதையும் குறிப்பாகக் காட்டவே இதை எழுதுகிறேன்.

பிள்ளைவரம் என்ற தலைப்புடன் எனது சிறுகதைத் தொகுதி ஒன்று முன்பு வெளிவந்துள்ளது. அதற்கு நல்ல பாராட்டும் ஆதரவும் கிடைத்ததால் உண்டான உற்சாகத்தோடு இத்தொகுதியையும் வாசகர்களுக்கு அளிக்கிறேன். வணக்கம்.

சென்னை
பெ. தூரன்
26-3-52.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/5&oldid=1535151" இலிருந்து மீள்விக்கப்பட்டது