பக்கம்:உரிமைப் பெண்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டணம் கை

73


அவன் ஏதோ தலை போகிற அவசரம் போல, “மறுபடியும் பத்து நிமிஷத்தில் வந்து அவரைக் கண்டு கொள்கிறேன்; கொஞ்சம் அவசரம்” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

நான் திரும்பி வந்ததும் விசாரித்தேன். அந்த ஆசாமி ஏதோ அவசரமாகப் போய்விட்டான்; பத்து நிமிஷத்தில் மறுபடியும் வருவான்” என்று என் மனைவி பதில் கொடுத்தாள்.

பத்து நிமிஷமாயிற்று; அரை மணி, ஒரு மணி ஆயிற்று. திரும்பி வருவதற்கு அவனுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நாங்களும் அவன் வரவை எதிர் பார்க்கவில்லை. கடிகாரத்தை மறதியாக வேறு எங்காவது வைத்துவிட்டேன் என்று தேட வேண்டாத இடமெல்லாம் தேடிக்கொண்டிருந்தோம். தேடும்போதே இது பட்டணம் கையின் வேலைதான் என்பது எங்களுக்கு நன்கு புலப்பட்டுவிட்டது. இருந்தாலும் கொஞ்ச நஞ்சம் உள்ள சந்தேகம் தீர்வதற்காக எல்லா இடங்களையும் துருவிப் பார்த்துவிட்டோம்.

நான் அன்று பாட்டுக் கச்சேரிக்குப் போகவில்லை. போலீசில் பிராது கொடுத்தல் முதலிய காரியங்களில் இரண்டு மூன்று மணி நேரத்தைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பினேன். அதே சமயத்தில் என் நண்பனும் வந்து சேர்ந்தான். அவன் அன்று காலையில்தான் சென்னைக்கு வந்தான். பட்டணம் பார்க்கவேண்டுமென்று அவனுக்கு வெகு நாளாக ஆசை. அதனால் கிறிஸ்துமஸ் சமயத்தில் உள்ள வேடிக்கைகளையெல்லாம் பார்க்கலாமென்று புறப்பட்டு வந்திருக்கிறான். காலையில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/78&oldid=1138082" இலிருந்து மீள்விக்கப்பட்டது