பக்கம்:உரிமைப் பெண்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராதா

85

 இப்படி ஒரு வருஷம் கழித்துவிட்டது. மகா பயங்கரமான யுத்தம் உலகத்தைப் பிடிக்கத் தொடங்கிற்று. ரெயில்கள் பல நிறுத்தப்பட்டன. இப்பொழுது கோவை செல்லுவதற்குப் பகலில் ஒரே ரெயில்தான் உண்டு. அதனால் அதில் கூட்டம் சொல்லி முடியாது. பிச்சைக்காரர்களும் கூட்டத்திற்கு ஏற்றவாறு பெருகி விட்டார்கள். சில சமயங்களில் இரண்டு மூன்று பேர் ஒரே வண்டியில் ஏறிவிடுவார்கள். தடிப் பையன் ஒருவன் தன் வயிற்றிலேயே தாளம் போட்டுக்கொண்டு பிச்சை வாங்கத் தோன்றியிருக்கிறான். அவனைக் கண்டால் சிலர், “ஏண்டா, ஆள் வாட்டசாட்டமாய் இருக்கிறாய்; வேலை செய்து சம்பாதிக்கிறதற்கென்ன?” என்று விரட்டுவார்கள். இப்படி விாட்டுவதில் நானும் முக்கியப் பங்கெடுத்துக்கொண்டேன். “என்ன ஸார், இவனுக்கு என்ன கேடு? செக்குலக்கை மாதிரி இருக்கிறான். இவனுக்கெல்லாம் காசு கொடுப்பது தர்மமே ஆகாது. ஏதோ கூன் குருடாக இருந்தால் உதவி செய்வது நியாயம்” என்று எல்லோருக்கும் படும்படி பிரசங்கமும் செய்து விடுவேன்.

ஒரு நாள் ராதாவும் அவள் அண்ணனும் ஏறிய சமயத்திலேயே இந்த வயிற்றுத் தாளக்காரனும் நானிருந்த வண்டியில் நுழைந்துவிட்டான். அன்றைக்கு எனது பிரசங்கத்தின் பயனாக அந்தப் பயலுக்கு தம்படி கூடக் கிடைக்கவில்லை. ராதாவுக்கு ஒவ்வொருவரும் காலணாவாவது கொடுத்தார்கள். எனக்கு அன்று வெகு சந்தோஷம், சாயங்காலம் வரையில் சீழ்க்கை அடித்துக் கொண்டே உற்சாகமாக வேலை செய்தேன்.

பிறகு சில நாட்களுக்கு ராதாவைக் காண முடியவில்லை. ஏன் அவள் வருவதில்லை என்று எனக்குள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/90&oldid=1138202" இலிருந்து மீள்விக்கப்பட்டது