பக்கம்:உரிமைப் பெண்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

உரிமைப் பெண்

 “எங்கேடா போனாய் இவ்வளவு நேரம்?” என்று கடித்தாள் அவள்.

“நாங்கள் பிரயாணம் போனோம்” என்று வெளியில் மனம் போனபடி சுற்றி வந்த குதுகலத்தில் அவன் சிற்றன்னேயிடமும் கொஞ்சின மாதிரி பேசினான்.

“ஒகோ பிரயாணமா? இவ்வளவு நேரம் எங்கேயோ நாய் போலக் திரிந்துவிட்டுப் பேசறதைப் பாரு” என்று அவன் கன்னத்தில் பளீர் பளீரென்று இரண்டு அறை கொடுத்துவிட்டாள்.

நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. திடீரென்று அவள் செய்த காரியமும், ராஜாமணியின் மேலிருந்த சிறிது கோபமும் என்னை உடனே குழந்தைக்குத் தேறுதல் சொல்லுவதிலிருந்து தடுத்துவிட்டன. சடையன் தான் அவளை உற்றுப் பார்த்து உறுமிவிட்டு ராஜாமணியிடம் சென்று வாலையாட்டித் தன் அநுதாபத்தையும் அன்பையும் தெரிவித்தது. ராஜாமணி அப்படியே திகைக்துப்போய் உட்கார்ந்துவிட்டான். வேறு குழந்தைகளைப் போல அவன் அழவே இல்லை. அழுதிருந்தால் அவன் துக்கம் ஆறியிருக்குமோ என்னவோ?

இந்நாள் வரையில் அவன் மேனியில் ஒர் அடி பட்டதில்லை. அவன் தாய் ஒரு கடுஞ்சொல் கூடக் கூறியிருக்கமாட்டாள். சிற்றன்னையும் இதுவரை கையால் தொட்டது கிடையாது. அவள் பார்வை யொன்றிலேயே ராஜாமணி பயந்து கிடப்பான்.

அவன் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தான். சடையன் அவன் முகத்தை நக்கித் தேறுதல் சொன்னது. அதை மெதுவாக ராஜாமணி அணைத்துக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/99&oldid=1138243" இலிருந்து மீள்விக்கப்பட்டது