பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உரைநடை வளர்ச்சி


தன்னிறைவு கொண்ட சிறு குழுச்சமுதாயங்களில் மொழி தோன்றியது. ஆனால், எழுதிப் பாதுகாக்க வேண்டிய கருத்துக்கள் அவர்களுக்கு இல்லை. எனவே வரிவடிவம் தோன்றவில்லை. பண்டமாற்றுக் காலங்களில்கூட வரிவடிவம் தோன்ற அவசியம் ஏற்படவில்லை. பொன்னும் காசும் பண்டமாற்று அளவீடாகத் தோன்றிய காலத்தில் வரிவடிவம் தேவையாயிற்று. கணக்கு வைத்துக்கொள்ளவும், கடிதங்கள், கைச்சாத்துக்கள் எழுதவும் வரிவடிவம் எழுந்தது.

நாணயங்கள்-பிராமிக் கல்வெட்டுக்கள்

தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரில் மெளரியர் நாணயங்கள் அகப்பட்டுள்ளன. சாணக்கியன் தென்னாட்டு வாணிகத்தைப் பற்றியும், முக்கியமாக முத்து, அகில், ஆடைகள் இவற்றை மகத வணிகர்கள் தென்னாட்டிலிருந்து பாடலிபுரத்திற்குக் கொணர்ந்தது பற்றியும் குறிப்பிடுகிறான். இவ்விரண்டையும் சேர்த்துப் பார்த்தால், தமிழ்நாடு, மகதப் பேரரசோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது புலனாகிறது. போடி நாயக்கனூர் நாணயங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. இவ்வாணிகத் தொடர்பு ஏற்பட்ட காலத்திலேயே, வாணிகத் தொழில் முறைக்கு உரைநடை பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அழியக்கூடிய பொருள்களில் எழுதப்பட்டிருந்ததால் அவை அழிந்துபோயிருத்தல் வேண்டும். ஏறக்குறைய கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் செதுக்கப்பட்டவை எனக் கணிக்கப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் தற்பொழுது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலுமிருத்து கிடைத்துள்ளன. அவற்றுள் எழுபத்தாறு கல்வெட்டுகளை ஆராய்ந்து ஐ. மகாதேவன் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார் (உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்குக் கட்டுரை-Tamil Brahmi Inscriptions). அவை யாவும் தமிழ் மொழியில் உள்ளனவென்றும், அவற்றின் வரிவடிவம் அக்காலத்தில் இந்திய நாடு முழுவதிலும் வழங்கி வந்த பிராமிவரிவடிவமென்றும் அவர் கூறுகிறார். தமிழ் வரிவடிவம் தமிழ் ஒலிக் குறிப்புகளுக்கேற்ப, வடநாட்டு வரிவடிவத்தினின்றும் மாற்றப் பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு வாசகங்களில் பெரும்பாலானவை சமணத் துறவிகளுக்குக் கல் படுக்கையும் அறையும் வெட்டுவித்ததையும் அவர்களுக்கு நடுப்பகல் உணவிற்கு ஏற்பாடு செய்ததையும் தெரிவிக்கின்றன. அவை வெட்டுவித்தவர் பெயரையும் அவர்கள் செய்த அறச்செயலையும் கூறுகின்றன.