பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

23


இவ்வுரைநடையின் நோக்கம் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் சமய நூல்களையும் கற்கும் ஆர்வம் உடையவர்களுக்கு அந்நூல்களை விளக்கிக் கூறுதலே. எனவே, இக்காலத்தில் எழுந்த உரைநடை புலமை மிக்க உரைநடையாகும்.

கருத்து விளக்கம்-மதிப்பீட்டு விளக்கம்

இவ்வுரைநடைகள் ஆசிரியரது புலமைக்கும் போதனைத் திறனுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்றவாறு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, திருக்குறள் உரையாசிரியர்களது உரைநடையை இருவகைப்படுத்தக் கூறலாம். மணக்குடவர், காலிங்கர், பரிதியார் ஆகியோர் முதலாசிரியரது கருத்துணர்ந்து விளக்கம் கூற முயன்றனர். இதனைக் கருத்து விளக்கம் (elucidation) என்று கூறலாம். பரிமேலழகர் தமது கொள்கைகளின்படி ஆசிரியர் கருத்தை மதிப்பிட்டு, அதனையே ஆசிரியர் கருத்தாகக் கூறுகறார். இம்முறையை மதிப்பீட்டு விளக்கம் (interpretation) என்று கூறலாம். குறள் உரையாசிரியர்களின நடை வேறுபாட்டை அறிதற் காகச் சில எடுத்துக்காட்டுகளை இங்குக் குறிப்பிடுவோம்.

<poem>வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்

(50)

பரிமேலழகர்-இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன் வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும் என்றவாறு. பின் தேவனாய் அவ்வறப் பயனுகர்தல் ஒரு தலையா தலின் 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனால் இல்நிலையது மறுமைப்டயன் கூறப்பட்டது.

மணக்குடவர்-இல்வாழ்க்கை வாழும் படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.

பரிதியார்-பூமியிலே இல்லறம் நடத்தும் முறையாலே நடப்பவன் தேவர்க்கு நிகரானவன் என்றவாறு.

பரிமேலழகர் உரையில் முற்கூறிய, தன் கொள்கையின் நோக்கில் பிறர் வாக்கைக் கானும் குறையுள்ளது. இது பின்னவர்களிடம் இல்லை. சுருக்கமாகவும் எளியதாகவும் இவர்கள் உரைநடை அமைந்துள்ளது. இவர்கள், வலிங்க பொருள் கூறாது, நேர்பொருள் கூறுகிறார்கள்.