பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உரைநடை வளர்ச்சி


கற்பிக்கும் முறை உரைநடை

இலக்கிய இலக்கண உரைகளின் நடை, ஆசிரியன், மானவனுக்குக் கற்பிக்கும் போக்கிலேயே வாய்மொழிப் போதனையின் செல்வாக்கு மிகுதியும் பெற்று விளங்குகிறது. ஆசிரியன் ஒரு பொருளை விளக்கும்பொழுது, மாணவனுக்குத் தோன்றக் கூடிய ஐயங்களை உணர்ந்து, அவற்றைக் கூறி, விளக்கமும் கூறும் விதத்தில் இவ்வுரையின் நடைப்போக்கு அமைந்துள்ளது. இதனைக் கற்பிக்கும் நடையென்று கூறலாம். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருவோம்.

பேராசிரியர்

குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பு என்பது குடிப் பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கம், குடிமை எனப்படும்; குடிப் பிறந்தாரது தன்மையைக் குடிமை என்றார் என்பது; அது ஊராண்மை எனவும் சொல்லுட. ஆண்மை புருடர்க்காம். அது ஆள்வினை எனப்படும். இது தலைமகட்கு ஒப்பது அன்றால் எனின், குடியாண்மை என் புழி ஆண்மை என்பது இருபாற்கும் ஒக்கும். ஆதலின் அமையும் என்பது. யாண்டு என்பது ஒத்தவாறு என்னை எனின், பன்னீர் யாண்டும் பதினாறி யாண்டும் பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவம் என்பது ஒத்தினுள் ஒப்ப முடிந்தமையின் அதுவும் ஒப்பு எனவே படும். 'உரு நிறுத்த காமவாயில்' என்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்று மேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு என்றவாறு.

இளம்பூரணர்

இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும், இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னே எனின்-முல்லையாகிய நிலனும், வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினிழந்து கிடந்தன; புயல்கள் முழங்கக் கவின் பெறும் ஆதலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இந்நிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலரும் காலம் ஆதலானும், அந்நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிரை வரும் காலம் ஆதலானும் ஆண்டுத் தனி இருப்பார்க்கு இவை கண்டு வருத்தம் மிகுதலின் அதுவும் சிறந்ததாயிற்று.