பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

27


மேற்கூறிய இலக்கிய, இலக்கண உரைகளின் உரைநடையின் இயல்புகள் சமய நூல்களின் உரைகளிலும் காணப்படும்: ஆனால், சமய நூல்களில் கற்பிக்கும் முறை உரைநடையை மாற்றி மாறுபட்ட கருத்துடையவர்களோடு விவாதிப்பதற்கேற்ற தருக்கமுறையில் உரைநடை அமைக்கப்படவேண்டியிருந்தது. நீலகேசி போன்ற நூல்களிலும் சிவஞான முனிவரது சிவஞான போத உரைகளிலும் இவ்விவாத நடையின் வளர்ச்சியைக் காண்கிறோம். இந்நூலில், பிறர் கொள்கை மறுப்பும் (பரபக்க நிராகரணம்) தன் கொள்கை நிறுவுதலும் (சுபக்க ஸ்தாபனம்) மிக முக்கியமானவை. இவ்வகையான தருக்கமுறையில் பக்கங்களைக் கூற உரையாசிரியனுக்கு இரு பக்கங் களின் நூலறிவும் அளவை நூல் தேர்ச்சியும் இருத்தல்வேண்டும். தத்துவ நூல்களில் பயிலும் உரைநடையைத் தத்துவ உரைநடையென்று கூறலாம்.

மணிப்பிரவாளம்

சமய நூல் பயிற்சியுடைய்வர்கள் தமிழும் வடமொழியும் கற்றிருந்தார்கள். அக்காலத்தில் வைணவமும் சமணமும் தென்னாட்டில் தமிழகத்திலும் மலையாளத்திலும் கர்நாடக நாட்டிலும் ஆந்திர நாட்டிலும் பரவியிருந்தன. இந்தப் பகுதிகளில் வழங்கிய மொழிகளில் சமஸ்கிருதச் சுலோகங்களை எழுதுவதற்குப் பொது வரிவடிவமொன்றைச் சமணர்கள் உருவாக்கினார்கள். இவ்வரிவடிவத்தையும் பிரதேச மொழியையும் கலந்து இருவகையான கிரந்த மொழிகளை அவர்கள் தோற்றுவித்தார்கள். இம்மொழி சம்பந்தர் காலத்திலேயே சமண சமய நூல்களை எழுதப் பயன்படுத்தப்பட்டது. அம்மொழியை எதிர்த்துச் சம்பந்தர், "ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் அறிகிலாது உருச்சிதைத்து உரைப்பது” என்று பாடினார். முற்காலப் பல்லவர் சாசனங்களிலும் இம்மொழி பயன்படுத்தப்பட்டது. சிற்சில மாறுதல்களோடு இம்மொழிகளை அவர்கள் மூன்று மொழிகள் வழங்கும் நாடுகளிலும் சமய நூல்கள் எழுதப் பயன்படுத்தினர். தமிழ் கிரந் தம் ஒருவகையாகவும், கன்னடதெலுங்குக் கிரந்தம் வேறு வகையாகவும் வளர்ச்சியடைந்தன. இவற்றை நெருக்கமாகக் கொணர்ந்து ஒரு நிலைப்பட்ட எழுத்து மொழியை உருவாக்கச் சமணர்கள் பெரிதும் முயன்றனர். சுருக்கமாகச் சொன்னால் ஒரு சமய இணைப்பு மொழியைத் தோற்றுவிக்க அவர்கள் முழு முயற்சி செய்தனர். சமய நூல்களைக் கற்றுக் கொள்ள மட்டுமே இம்மொழி உதவிற்று.