பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

31


நோக்கம் கொண்டிருந்தவர்கள். உயர் சாதிக்காரர்களுக்கு எழுத்தறிவும் இலக்கியப் பயிற்சியும் உண்டு. எனவே இவர்கள் செய்யுள் நடையில் எழுதினார்கள். உரைநடையும் பண்டித நடையாக இருந்தது. எனவே, இவர்கள் காலத்திலேயே தமிழ் உரைநடையில் இரு போக்குகள், பழைய உரைநடை மூலங்களின் தொடர்ச்சியாக வளர்க்கப்பட்டன. இலக்கியங்களுக்கு உரையாக எழுதப்பட்ட உரைநடையும், கல்வெட்டில், எல்லோருக்கும் தெரிய வேண்டிய செய்திகளை எழுதி வைக்கப் பயன்பட்ட ‘வியவஸ்தை' என்ற பகுதியின் உரைநடையும் வளர்ந்தன என்று கூறலாம்.

கல்வெட்டுக்களில் மன்னர் குலப்பெருமை, மன்னர் போர் வெற்றிகள் பற்றிக் கூறும் பிரசஸ்தி, மெய்க்கீர்த்தி ஆகிய பகுதிகள் செய்யுள் நடையில் இருக்கும். வியவஸ்தை என்ற பகுதி, பேச்சு நடையைச் சற்றுத் திருத்திய உரைநடையில் இருக்கும்.

இந்த இருவகையான போக்குகளின் வளர்ச்சியாகவே கத்தோலிக்கப் பாதிரிகளின் இருவகை நடைகளையும் கருதலாம். ஒன்று எழுத்தறிவும் இலக்கியப் பயிற்சியும் உடையவர்கள் படிப்பதற்காக எழுதப்பட்டது. மற்றொன்று புதிதாக எழுத்துக் கற்றுக் கொண்ட, இலக்கியப் பயிற்சியில்லாத சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது. 'பரமார்த்த குரு கதை', 'அடியார் வரலாறு' நடையில் இருந்து சிறிது திருத்தமானது. ஆனால் எளிமையானது.

ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி

இதற்குப் பின் நமக்குக் கிடைக்கும் உரைநடை பற்றிய சான்று ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி. இந்த டைரி எழுதப்பட்ட காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி. இவர் 1709 முதல் 1751 வரை 52 ஆண்டுகள் வாழ்ந்தவர். இவரது உரைநடைக்கு எடுத்துக்காட்டாக சி.சு. செல்லப்பா, அவருடைய தமிழிலக்கிய விமர்சனம் என்று நூலில் கொடுத்துள்ள மேற்கோளையே குறிப்பிட்டு, அந்நடையின் தன்மை களை ஆராய்வோம். இந்த நாள் காலமே ஆறரை மணிக்கு மேல் ஏழு மணிக்குள்ளாக குவர்னர் துரை வீட்டிலே போயிருக்கச்சே நம்மைப் பார்த்து குவர்னர் துரை கேட்ட சேதி என்ன வென்றால் கையிலே என்ன இருக்கு என்று கேட்டார்.