பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

37


இவ்வாசகங்கள் நீளமான வாக்கியங்களாக அமைந்திருந்தபோதிலும், நடையில் தெளிவும் விறுவிறுப்பும் காணப்படுகின்றன.

அராபிக் கதையில் நீளமான வாக்கியங்களைக் கைவிட்டு, சிறு வாக்கியங்களை ஆசிரியர் கையாளுகிறார்.

அந்த க்ஷணமே ஒருவன் என்னிடத்துக்கு வந்து நீ யார் என்று கேட்டான். அவனுக்கு நான் என் விருத்தாந்தத்தைக் குறித்துச் சொன்னேன். அதன் பின்பு அவன் என் கையைப் பிடித்து இழுத்து ஒரு குகைக்குள் இட்டுக் கொண்டு போனான். அவ்விடத்தில் அனேக மனிதர்கள் இருந்தார்கள். அவர்களை நான் பார்த்துப் பிரமித்து ஆச்சரியமடைந்ததைப் பார்க்கிலும், என்னை அவர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

தொடக்க கால நாவல்-சிறுகதை

இந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில இலக்கிய அறிவின் தாக்கத்தால் தமிழில் நாவலும் சிறுகதையும் தோன்றின. நாவல் என்ற தற்கால வரையறைக்கு அவை ஈடாக முடியாவிட்டாலும் கற்பனைக் கதை (Romance) என்ற வகையில் அவற்றைச் சேர்க்கலாம். வேதநாயகம் பிள்ளையின் நீண்ட கதைகளை இவ்வகையான படைப்புகளில் சேர்க்கலாம். ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் தமிழில் தோன்றிய முதல் நாவல்களில் ஒன்று. பெண் கல்வி, விதவை மணம், சாதி சமத்துவம் முதலிய சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்ப உரைநடையை இக்காலத்து ஆசிரியர்கள் பயன்படுத்தினார்கள். பிரச்சார வலிமை இவ்வுரைநடையில் காணப்பட்டது. தமிழ்ப் பற்று.இவர்களனைவருக்கும் பொதுவான உணர்ச்சி.

வேதநாயக முதலியார்

எண்ணிறந்த தேவாலயங்களும், அன்ன சத்திரங்களும், நிலவளமும், நாகரிகமும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷம் எனவும், ஆகபடியே தமிழ் பாஷையும் சர்வோத்திருஷ்டமான பாஷையென்றும் சகலரும் அங்கீகரிக்கிறார்கள்.

இராஜம் ஐயர்

ஶ்ரீநிவாசனுக்குச் சாந்தி முகூர்த்தமான சமாச்சாரத்தை நாம் முன்னமே சொல்ல அவகாசப்படவில்லை. அவனும் லெட்சுமியும் நளனும் தமயந்தியும் போல வெகு அந்நியோந்நியமாக இருந்தார்கள்.