பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி பிற்காலம்


பாரதி காலத்திற்குப் பிறகு தேசிய இயக்கம் வலுப்பெற்றது. சமூகச் சீர்திருத்த இயக்கமும் அதனின்று பிரிந்து பரவியது. இரண்டு இயக்கங்களும் தமிழ் மக்களைக் கவர்ந்து கொள்ளப் பிரச்சாரம் செய்தன. பத்திரிகைகள் இவ்விரண்டு இயக்கங்களுக்கும் உரியனவாகத் தோன்றின.

ஏடுகள்

பாரதி நடத்திய பத்திரிகைகள் தேசியப் பிரச்சாரம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய இரு கருத்துக்களையுமே நாட்டில் பரப்பின. ஆயினும் விடுதலை வேட்கையே அவற்றின் சங்கநாதமாக ஒலித்தது. விடுதலை வேட்கையை அடிநாதமாகக் கொண்டு வ. வே. சு. ஐயர், பரலி சு. நெல்லையப்பர், திரு.வி.க., டி.எஸ். சொக்கலிங்கம் முதலியவர்கள் பத்திரிகைகளை நடத்தினார்கள். வேகமான சமூகச் சீர்திருத்தம், பிராமண எதிர்ப்பு, ஆரிய திராவிட வேறுபாடு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பத்திரிகைகள் நடத்தினார். சிறு நூல்களும் வெளியிட்டார்.

பொது மக்கள் உள்ளங்களைத் தம் பக்கம் திருப்புவதற்காக இப்பத்திரிகைகளும் பிரசுரங்களும் முயன்றன. மிக எளிய நடையில் தருக்கரீதியாக இவற்றில் ஆசிரியர்கள் எழுதினார்கள்.

ஈ.வெ.ரா. தமது சொற்பொழிவில் நேரடியாகச் சொல்லுவதுபோலவே, எழுத்திலும் எழுதினார். பேச்சு வன்மையில் காணப்படும் வேகம் எழுத்திலும் இருந்தது. எழுத்தில் காணப்பட வேண்டிய சொற்செட்டு, இறுக்கம், இவரது எழுத்துக்களில் காணப்படவில்லை.

திரு. வி. க. நடை

திரு. வி. க. வின் நடை எளிமையாக்கப்பட்ட பண்டித நடை. இந்நடையை அவர் இலக்கியக் கட்டுரைகள் எழுதவும் அரசியல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தினார். அது பேச்சுத் தமிழ்நடைக்கு மிகவும் விலகியதாக இருந்தது. ஆனால் அவ