பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

43


ருடைய பேச்சிலும் எழுத்திலும் தமக்கென உரிய ஒரே நடையைத்தான் கையாண்டார். அவரது காலத்திற்குப் பிறகு, அந்த நடையைப் பின்பற்றுவோர் தமிழகத்தில் இல்லை

தமிழில் மார்க்சீயச் சிந்தனைகள்

சிங்காரவேலுச் செட்டியார்

சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரத்தில் முதன் முதலில் ஈடுபட்டுப் பின்னர் சமூகப் புரட்சி நிலைக்கு வளர்ச்சியடைந்த சிங்காரவேலுச் செட்டியார், பேச்சுத் தமிழ் நடையை, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை விளக்கவும், மார்க்சீயத்தைப் பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்தினார். பாரதியின் நடையை வளர்த்துப் புதிய கருத்தை முதன்முதலில் பிரச்சாரம் செய்ய ஒரு புது நடையமைத்தார். மார்க்சீயத் தத்துவத்தையும் பொருளாதாரத்தையும் தமிழில் முதலில் வெளியிட்டவர் இவரே. தொழிலாளர்களிடையே தொழிற்சங்கப் பணியும் கல்விப் பணியும் புரிந்த சிங்காரவேலர், தொழிலாளர்களுக்கு விளங்கக்கூடிய எளிய தமிழ் நடையையே கையாண்டார். தத்துவச் சிறப்புச் சொற்களை முதன் முதலில் மொழியாக்கம் செய்யவேண்டிய அவசியம் அவருக்கிருந்தது. அவருக்கு முன் அப்பணியைச் செய்தவர் எவரும் இல்லை. எனவே பல இடர்ப்பாடுகளை அவர் கடக்கவேண்டியிருந்தது. ஆங்கிலச் சொல்லின் நுட்பமான பொருளை விளக்கும் முறையில் அவர் சொற்களைப் புதிதாக உருவாக்கினார். கருத்தை விளக்கக்கூடிய சொல் தமிழில் கிடைக்காவிட்டால், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு அல்லது வடமொழிச் சொல்லைக் கையாண்டார். கருத்தை விளங்கவைப்பதையும் எளிமையாகச் சொல்லுவதையுமே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். புதிய உலகளாவிய மார்க்சீயச் சிந்தனைகளை அவர் தமிழுக்கு அளித்தார்.


தனித் தமிழ்

பிராமண எதிர்ப்பின் விளைவாக ஆரியர் மொழியான சம்ஸ்கிருதத்தின் மீது சில தமிழ் அறிஞர்கள் வெறுப்புக் கொண்டனர். இவர்களில் சம்ஸ்கிருதம் கற்ற மறைமலையடிகள் போன்றோரும் இருந்தனர். இவர் காகுந்தலம் போன்ற