பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானமாமலை

51


யாடல் போல எழுதும் பாணியாகும். இத்தகைய நடை எதிர்பார்த்த வெற்றியினை அவர்களுக்குத் தேடித் தந்தது.

ஆங்கில மொழி நடை மரபில், எழுவாய் முதலில் அமைய வேண்டும், பயனிலை இறுதியில் அமையவேண்டும் என்ற மரபு கிடையாது. தமிழில் இத்தகைய இலக்கண மரபு உண்டு. தமிழ்ச் செய்யுளில் இது மாறுபட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஆங்கில மரபுப்படி பயனிலை முதலிலும் எழுவாயினை அடுத்தும் அமைத்து எழுதுவது அண்ணாதுரையின் வழக்கம். இந்த மரபினைத் தி.மு.க.வினர் பெரிதும் பின்பற்றினார்கள்.

கேட்டோம், மருண்டோம், கண்டோம், மகிழ்ச்சி கொண்டோம். மடிந்தது பொல்லாங்கு ஒழிந்தனர் புரட்டர்; சாய்ந்தனர் புல்லர்கள்.

இத்தகைய நடையில் உள்ள ஓசை நயம் கேட்பவர்களையும் படிப்பவர்களையும் கவர்கிறது. விஷயத்தைவிட ஓசை நயம் கவர்ச்சி உடையதாக உள்ளது.

உழைப்பாளிகள் சுரண்டப்படுகின்றனர் என்பதனைப் புள்ளி விபரங்களுடன் கூறுவது ஆராய்ச்சியாளர்கள் கையாள வேண்டிய நடை. பாமரனாய் இருக்கும் உழைப்பாளியைத் தான் சுரண்டப்படுவதை உணர வைக்கவேண்டும். அவனுக்குத் தெரிந்த உவமானத்துடன் கூறினால் அதன் பலன் அதிகம் கிட்டும்.

காட்டில் வாழும் கடும்புலிக்குக் குகையும், நச்சுப்பல் பாம்புக்குப் புற்றும், நயவஞ்சக நரிக்குப் புதரும் கிடைக்கிறது. ஆயிரமாண்டுகள் அழகொளியுடன் நிற்கத் தரும் அரண்மனைகளும் மந்தகாச வாழ்விற்கான மாளிகை களும் மாற்றோரைத் திகைக்கச் செய்யும் கோட்டை கொத்தளம் அரண் அகழி ஆகியவற்றினையும் கட்டித் தந்திடும் எனக்குத் தங்க ஓர் குடில் இல்லை.

சுரண்டப்படுகிறவன் எண்ணுவதைப் போல் எழுதும் இத் தகைய யுக்திகளையும் தி.மு.க.வினர் வெற்றிகரமாகக் கையாண்டனர்.

படித்த இளைஞர்களையும் மாணவர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்துகொள்ளத் தொடர்நடை, நீளமான சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர் தி.மு.க. எழுத்தாளர்கள்.