பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

ஒரு மொழியின் வளர்ச்சி, தோற்றத்தின் தொன்மையிலோ, இலக்கிய-இலக்கணச் சிறப்புக்களிலோ, பேசுவோரது எண்ணிக்கையிலோ மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. எந்த மொழியும் புதிய வளர்ச்சிகளைக் கையாளும் வகையில் செழுமையும் வளமும் கொண்டிருந்தால்தான் உயிரோட்டத்துடன் அம்மொழியினைப் பேசுவோருக்கு அது பயன்படுவதாக அமையும்.

ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களும் ஏற்றங்களும் அப்புதிய சூழ்நிலைகளுக்கேற்ப மொழியின் உரைநடை அமைப்பை உருவாக்கியிருக்கின்றன. புதிய சொல்லாக்கம், சொற்றொடரமைப்பு, செறிவு, நெகிழ்வு என்ற யாவும் அவ்வக்காலத் தேவைகளையொட்டித் தோன்றி, அவ்வக் காலக் கருத்துக்களைத் தெளிவாகக் காட்டும் வலுவான கருவியாக மொழியினை வளப்படுத்துகின்றன. குழுச்சமுதாயம் தனது தேவைகளுக்கேற்ப மொழியையும் உரைநடையையும் உருவாக்கிக் கொண்டது. நிலவுடைமை அமைப்பு தனது வாழ்நிலைக்குத் தேவையானவற்றை ஏற்றுக் கொண்டது. அத்துடன் நிலவுடைமை முறைக்கு அடித்தளமான தத்துவக் கருத்தோட்டங்களை வெளியிடுவதற்கு மொழியையும் உரைநடையையும் அது ஏற்ப அமைத்துக்கொண்டது. தொழிற்புரட்சிக்குப் பின்னர் தோன்றிய புதுமைகளையும் மின்னியல் காலத்தின் நுணுக்கங்களையும் எடுத்துக்காட்டக் குழுச் சமுதாயத்திலோ, நிலவுடைமை அமைப்பிலோ வாழ்ந்த மக்கள், சொற்களை-சொற்றொடர்களை உருவாக்கிக் கொடுத்திருக்க முடியாது. காலத்தின் தேவைகளைக் கொண்டு, இருக்கின்ற வேர்ச் சொற்களின் துணையுடன் புதிய சொல்லாக்கங்களையும், கண்டுபிடிப்புகளின் அடிப்படைகளையொட்டிய கலைச்சொற்களையும் காண்பது அக்குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களது பணியாகும்.

மொழி வரலாற்றையும் உரைநடை வளர்ச்சியையும் ஆராய்கின்றவர்கள் இந்த அடிப்படையைப் புறக்கணித்துவிடக் கூடாது.

வரலாற்று வழியான பயன்பாடு கருதி ஆராயும் அடிப்படையில் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் இந்நூலினைப் படைத்துள்ளார்கள். பேராசிரியர் அவர்களின் இந்தப் பார்வையும் நோக்கும்தான் வழக்கம் போலப் பிறரது