பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆசிரியர் பிரான் ஒளவை கோமான் ம.வி.இராகவன் (நாடறிந்த நல்லாசிரியர் - ஒளவை அவர்களின் தலைமாணவர்) இருபதாம் நூற்றாண்டு நம் தாய்மொழியாம் தமிழ்மொழி மறுமலர்ச்சியுற்று மாண்பு பெற்ற காலம். இந்நூற்றாண்டில் தம் நலமும், தம் முன்னேற்றமும் கருதாது தமிழின் மறுமலர்ச்சியே குறியாக அல்லும் பகலும் அயராதுழைத்த நல்லிசைப் புலவர் பெருமக்கள் பல்லோராவர். அவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் உரைவேந்தர்’ என்று புலவருலகம் ஒரு சேரப் புகழ் கூறும் செந்தமிழ்ச் செல்வராகிய ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள், தமிழ் வளர்த்த தனிப் பெருமைக்குரிய மதுரையம் பதியில் கல்லூரிப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள பிள்ளையவர்கள் மறைவைக்கேட்டுத் திடுக்குற்றேன். ஈரம்மலிந்த என் விழிகளோடு என் நினைவும் ஐம்பதாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது. தெரிந்தெடுத்த அருந்தமிழ் ஆசிரியர் - நாற்பதாண்டு கட்குமுன் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியர்! நான் தகுதி வாய்ந்த தமிழாசிரியரைத் தேடி அலைந்து கொண்டிருந்த தமிழார்வம் கொண்ட இளைஞன். உடற்பிணியின் குறுக்கீட்டால் என் ஆங்கிலப் பயிற்சி இடையில் தடைப்பட்டது. பிணியினின்றும் விடுபட்டபின் விட்ட ஆங்கிலப் பயிற்சியைத் தொட்டுத் தொடர விருப்பமின்றித் தமிழ் பயிலத் தொடங்கினேன். புலவர் சிலரை அடுத்துச் சிறுநூல்கள் பலவற்றைப் படித்து முடித்த நான் பெருங்காப்பியங்கள், சங்கத் தொகை நூல்கள், பேரிலக் கணங்கள் ஆகிய பெருநூல்களைத் தொடர்ந்து பயின்று பல்கலைக்கழகப் புலவர் (வித்துவான்) தேர்வு எழுத விரும்பினேன். அதுபோது அருகிலிருந்த புலவர்களுள் எவரையும் அப்பெருநூல்களைப் பாடம் சொல்லுவதற்குரிய தகுதி வாய்ந்தவராக என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஓராண்டுக் காலம் வறிது கழிந்தது. காலக் கழிவை எண்ணிக் கவன்றிருந்த நிலையில் என் நல்வினைப் பேறாகப் பிள்ளையவர்கள் சேயாறு கழக உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை தமிழாசிரியராக வந்து சேர்ந்தார்கள். (1931)