பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ்ப்பொலிவேடு! 19 அறிவும், ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது. அவர் நகராண்மைக் கழகப் பணியை விடுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை அடுத்து, நாவலர். ந.மு. வேங்கடசாமி நாட்டார். கவியரசு, வேங்கடாசலம்பிள்ளை போன்ற பெரும் புலவர்களிடம் அருந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் திருந்தக் கற்றுத் திறமான புலமை பெற்று, சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் சிறப்புறத் தேறிப் பட்டம் பெற்றார். பின்னர் வடஆர்க்காடு மாவட்டக் கழகத்தில் தமிழாசிரியராகச் சேர்ந்த சில ஆண்டுகள் பல உயர்நிலைப் பள்ளிகளில் பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். பின்னர் திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் பேராசிரியர் பதவியேற்றுச் செந்தமிழ்ப் பணிபல சிறக்கச் செய்தார். அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறை அவரை அழைத்து அமர்த்திக் கொண்டது. அங்கு அமர்ந்த அவர், கல்வெட்டு ஆராய்ச்சியிலும், மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் பங்கு கொண்டு பயனுள்ள பணிபல புரிந்தார். இறுதியாகச் சங்கமிருந்து தமிழ் வளர்த்த மதுரையம்பதி பிள்ளையை வரவேற்றது. அங்கு அவர் தியாகராசர் கல்லூரியில் பேராசிரிய ராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பதவியினின்று ஒய்வு பெற்றாரேயன்றிப் பணியினின்றும் ஒய்வு பெற்றாரில்லை. பதவி ஒய்வைப் பயன்படுத்திக் கொண்டு செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தார். ஆசிரியத் துறையில் பிள்ளையவர்கள் எய்திய இவ்வுயர்வு இயல்பாக அமைந்த வளர்ச்சியே ஆகும். ஆசிரியருக்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும் அவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன. பிறவியாசிரியாராகிய அவர் அத்துறையில் தமக்கென்று தனிமுறை ஒன்றை வகுத்துக் கடைப்பிடித்து, அப்பண்புகளைப் பேணி வளர்த்துக் கொண்டார்; அவ்வளவே. அவர் சிலர் போலத் தாம் உலகியல் வாழ்வில் உயர்வதற்கு வேண்டும் வசதிகளைப் பெற விரும்பியிருப்பாராயின், ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த தேர்ச்சிக்கும், தமிழ் மொழியில் அவருடைய ஆழ்ந்தகன்ற புலமைக்கும் அரிய ஆராய்ச்சி அறிவுக்கும் எம்.ஏ. (M.A.) பி.எச்.டி (Ph.D.) போன்ற பயன்தரும் பட்டங்கள் பலவற்றை எப்பொழுதோ எளிதில் பெற்றிருக்கலாம். தம்மைப் பற்றிய நினைவே, தம்முன்னேற்றம் பற்றிய சிந்தனையே சிறிதும் இன்றி, தாம் குறிக்கொண்ட தமிழ்த் தொண்டுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கருத்தாயிருந்தார்