பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! 23 வீரசோழியம், இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி, யாப்பருங்கலம் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றிற்குப் பண்டையாசிரியர்கள் கண்ட உரைகளோடு அவருக்கு மனப்பாடம் இலக்கியத்தினும் இலக்கணத்தில் அவருக்கு ஈடுபாடு மிகுதி. தொல்காப்பியத்தில் அவருக்குள்ள தேர்ச்சியும், அதன் பல்வேறு உரைகளில் அவர் அரிதில் முயன்று பெற்றுள்ள பயிற்சியும், ஆராய்ச்சியும் நான் அறிந்து அனுபவிக்கும் பேறு பெற்றவை. இலக்கியங்களுள் சிறப்பாகச் சங்கத்தொகை நூல்களிடத்தும், திருக்குறளிடத்தும் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். முற்காலக் காப்பியங்களுள் சிந்தாமணியும், பிற்காலக் காப்பியங்களுள் கம்பராமாயணமும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. சிந்தாமணியின் தமிழ்ச்சுவையையும், கம்பராமாயணத்தின் கவிச் சுவையையும் அவர் தெவிட்டாமல் நுகர்ந்து திளைப்பவர். பிள்ளையவர்களின் புலமை ஒருநெறிக்கு உட்பட்டதன்று: பல துறைகளிலும் பாய்ந்து பரவியது. இலக்கியம், இலக்கணம், சமயம், அளவை, வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு துறைகளுள் ஒவ்வொன்றிலும் தனித்தனிப் புலமை பெற்றவர் பலர் இருக்கக் கூடும். ஆனால் பிள்ளையவர்களைப் போல அவ்வனைத்தினும் ஆழ்ந்தகன்ற புலமை பெற்றவர் அரியராவர். அவர் எடுத்துக்கொண்ட நூல் எதுவாயினும் அதனைப் படித்தறிவதோடு அமையாமல் தம்நுண்மாண் நுழை புலத்தால் நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை உணர்வதில் ஆர்வமும் முயற்சியும் உடையவர்; பிறர் கடுமையானவை என்று கருதிக் கைவிடும் நூல்களைக் கைக்கொண்டு பொறுமையாகப் பலகால் பயின்று பயன் கண்டு மகிழும் பண்புடையவர். அவர் புலமை பழமையினின்றும் மலர்ந்து புத்தொளிகானும் புதுமையது. பிறர் சிலரைப் போலப் பழைய நூல்களையும் உரைகளையும் பழித்து ஒதுக்குவதும், புதுமை மோகத்தால் மரபோடு மாறுபட்ட பொருந்தாத புதுக்கருத்துக்களைப் புகுத்திப் போலிப்புகழ் பெற முயல்வதும் ஆகிய புன்மைக்குணம் அவரிடம் இல்லை. அவ்வாறே புதுமைக்கு இடங்கொடாமல் பழமையையே பற்றி நிற்கும் பிடிவாத குணமும் உடையவர் அல்லர். அவர் தம்மிடம் பாடங்கேட்கும் மாணாக்கர்களைப் பாடம் தொடங்குமுன் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்ற பண்டை உரையாசிரியர்கட்கு வணக்கம் கூறும் பாடல்களை ஒதுமாறு வற்புறுத்தி வந்தது அவர்களிடத்தும் அவர்களுடைய உரைகளிடத்தும் அவருக்கிருந்த பற்றையும் மதிப்பையும் விளக்குவதாகும். ஆனால் அவர் வேறு சிலர்போல உழுத சால் வழியே உழுது செல்லும் இழுதை நெஞ்சினர்