பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ்ப்பொலிவேடு! 27 பாடல் பயிலும் இடத்தைச் சுட்டி, பாடலின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் கூறி, அருஞ்சொற்கள், தொடர்களுக்குப் பொருள் விளக்கம் செய்வார். அரிய இலக்கண அமைதிகள், வரலாற்றுச் செய்திகள், புராணக்கதைகள் ஆகியவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். சொல் நயம், பொருள் நயம், செய்யுள் நயங்களை மாணவர்கள் உணர்ந்து சுவைக்கச் செய்வார். சில நாட்கள் தொடர்ந்து இம்முறையில் பல பாடல்களை நடத்தப் பின்னர், எஞ்சிய பாடல்களை நாடோறும் சிலவாக மாணவர்களையே இம்முறையில் படித்துப் பொருளறிந்து வரச் செய்வார். அவ்வப்பொழுது அவர்களைச் சோதித்து, குற்றம் குறை காணின் குறித்துக் காட்டித் திருத்தம் செய்வார்; படித்த பாடல்களுக்கு அவர்கள் கண்டவாறு விரிவுரை எழுதிவரச் செய்தும், தலைப்புத் தந்து அப்பாடல்களின் பொருளைத் தழுவிக் கட்டுரை வரைந்து வரச்செய்தும் படித்துப் பார்த்துத் திருத்தித் தருவார். தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் பேரார்வம் கொண்டவர். அவர் அவற்றைப் பாடம் சொல்லும் முறை, மாணவர்களை அவற்றிடம் ஆழ்ந்த பற்றுக் கொள்ளச் செய்யும். தொல்காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது தேர்வுக்குரிய ஒர் ஆசிரியன் உரையை மட்டும் விளக்குவதோடு அமையாது உள்ள வேறு ஆசிரியர்களுடைய உரைகளையும் உடன் வைத்து ஒருங்கு விளக்குவார். தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி ஆகிய தொடர்புள்ள பிற நூல்களையும் சேர நடத்துவார். நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியோர் தாம் உரை கண்ட இலக்கிய, சமய நூல்களின் உரைகளில் தந்துள்ள இலக்கணக் குறிப்புக்களை எடுத்துக்காட்டி இனிது விளக்கம் செய்வார். உரையாசிரியர்கள் தம்முள் மாறுபட உரை கண்டுள்ள இடங்களில் ஒவ்வொருவர் உரையையும் தனித்தனியாக விளக்கி, அவர்கள் மாறுபாட்டுக்குரிய காரணங்களை நுணுகி ஆராய்ந்து முடிவு கூறுவார். தொல்காப்பியப் பகுதிகள் பற்றிப் பிற்காலப் புலவர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள ஆய்வுரைகளையும் நூல்களையும் படிக்கச் செய்து, அவர்கள் கொண்ட கருத்துக்களின் வன்மை மென்மைகளைக் காரண காரியத்தோடு விரிவாக விளக்கிக் காட்டுவார். பின்னர், தனித்தனித் தலைப்புக்களில் ஆய்வுரைகள் எழுதி வரச் செய்து படித்துத் திருத்தம் செய்வார். இம்முறையால் மாணவர்கள் தாம் பாடம் கேட்ட நூல்களில் ஐயம், திரிபு, அறியாமையின்றித் தெளிவும்