பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு உறுதி கொண்டார். புத்த சமய நூல்களையும் பிற சமய நூல்களையும் முயன்று பெற்று முறையாக ஆய்ந்தார். அச்சமயங்கள் பற்றிய வடமொழி நூல்களை அம்மொழி வல்லுநரின் துணை கொண்டு படித்தறிந்தார். அளவை நூற்செய்திகளை ஐயமற ஆய்ந்து தெளிந்தார். பின்னர் அப்பகுதிக்குத் தெளிவான விளக்கவுரை எழுதிமுடித்து அவ்வுரை நூலை வெளியிடச் செய்தார். அவ்வுரையின் உதவியால் இன்று யாவரும் மணிமேகலை நூல் முழுவதையும் படித்துப் பயன் பெறுவது எளிதாகியுள்ளது. மணிமேகலை உரைக்குப் பின்னர் அவர் நாட்டம் நற்றிணையின்பால் சென்றது. பல்லாண்டுகட்கு முன் பின்னத்துர் நாராயணசாமி ஐயர் தம் புலமையே துணையாக, அவர் காலத்தில் கிடைத்த அருகிய ஆதாரங்களைக் கொண்டு நற்றிணைக்குச் சிற்றுரையொன்று எழுதி வெளியிட்டிருந்தார். பிள்ளையவர்கள் தம் மாணவர்கட்கு நற்றிணைப் பாடம் நடத்தியபொழுது அவ்வுரையின் குறைபாடு களைக் கண்டு, அந்நூல் முழுவதையும் நன்கு ஆராய்ந்து அரிய குறிப்பு எடுத்திருந்தார். அக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நூல் முழுவதற்கும் விளக்கமான விரிவுரை எழுதி முடித்தார். அண்மையில் அஃது இருபகுதிகளாக வெளியிடப் பட்டது. பிள்ளையவர்களின் முன்னைய நூலுரைகள் அனைத்திலும் இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது பிள்ளையவர்கள் மாணவர்கட்குப் பாடம் சொல்லும்பொழுது ஒவ்வொரு நூலுக்கும் விரிவான விளக்கக் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட உரைகள் யாவும் பெரிதும் அக்குறிப்புக்களின் விரிவே ஆகும். அகநானூறு, குறுந்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றுக்கும் அவர் அரிய குறிப்புகள் வரைந்து வைத்திருந்தார். அவை இன்னும் உரைவடிவு பெற்றில. அவையும் உரைவடிவில் வெளிவருமாயின் தமிழ் மொழியின் வளம் செழிக்கவும், பிள்ளையவர்களின் புலமை நலத்தை உலகம் அறிந்து உவக்கவும் உதவும் என்பது ஒருதலை, பிள்ளையவர்கள் ஒய்வு பெற்ற பின்னரும் ஒய்ந்திராமல் பொள்ளாச்சி வள்ளலாகிய மகாலிங்கம் அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, வள்ளலாரின் திருவருட்பா நூலுக்கு விரிவுரை எழுதினார். தமிழ் அறிஞர்களின் துணையும் தமிழ்ச் செல்வர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறின் அவர் தமிழ்மொழியின் செழிப்புக்கு இன்னும் பல சிறப்புத் தொண்டுகள் செய்திருக்கக்கூடும். அதற்குரிய ஆர்வமும் . ஆற்றலும் அவருக்கு உண்டு.