பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழ்மகன் (உரைவேந்தர் - 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை) பண்டைநாளில் வாழ்ந்த தமிழ்மகன் என்னாது சங்ககாலத் தமிழ்மகன் என்றே தலைப்பு அமைகிறது. பண்டைக்காலம் என்பது ஒரு காலவெல்லைக்குள் அடங்காது பரந்த பண்பினதாய் இருக்கிறது. சங்ககாலம் என்ற வழி, முற்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சங்கம் இருந்து தமிழ்த் தொண்டாற்றித் தனிப்பெருஞ் சிறப்பெய்தியிருந்த காலம் என்ற உணர்வு நம் உள்ளத்தில் எழக் காண்கின்றோம். ஆயினும் இச் சங்ககாலம், இத்துணை ஆண்டுகட்கு உட்பட்ட காலம், மேற்பட்ட காலம் என எண்ணிட்டுக் காண முடியாத நிலையில் உள்ளது. சங்கத்தின் உண்ம்ையையே ஐயுறுவோரும், ஐயுற்றுச் சங்கமென்பதே இருந்ததில்லையென்போரும், உண்டென்போரும், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னென்போரும் பின் என்போரும் எனப் பல திறத்தராய் ஆராய்ச்சியாளர் உளர். மற்று, நம் செந்தமிழ் மொழிக்கண் பழைய நூல்கள் பல சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன. அவ்விலக்கியங்கள் தோன்றி நிலவிய காலமே சங்க காலமாம் என்ற பொது எல்லையை ஈண்டுக் கால வெல்லையாகக் கொள்கின்றேன். அவ் விலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என மூவகையாய் இயலுகின்றன. இவை எழுந்து வளர்ந்த சிறந்த காலம், சங்க காலம் இன்றேல், இவை சங்க இலக்கியம் எனப்படா. - - பத்துப்பாட்டு என்பது ஒரு தொகை நூல். இதன்கண் திருமுருகாற்றுப்படை முதலாகக் கூத்தராற்றுப்படை ஈறாகப் பத்துப் பெரும்பாட்டுக்கள் உள்ளன. இவற்றுள் இயற்கையின் இனிய காட்சி இனிது காட்டப்பெறுகிறது. அக்காட்சியைக் காட்டும் கட்டுரைகள் இலக்கணவரம்பு கடவாது, உள்ளம் கொள்ளத்தக்க அளவில் நின்று இன்பம் சுரப்பிக்கும் திறம் எண்ணுந்தோறும் நமக்கு இறும்பூது தருகின்றது. இதனால் கல்வியின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார்கள். தமிழ்மன்னன் ஒருவன் தன் கோல்நிழலில் வாழும் மக்களைநோக்கி, "உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே,