பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்தம் (உரைவேந்தர் சொற்பொழிவிலிருந்து 1942) ( சிவவழிபாடு பண்டைநாளில் உலகில் பல இடங்களில் காணப்பட்டதாக ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர். அச்சிவ வழிபாடு இந்நாளில் சுருங்கித் தமிழ்நாட்டெல்லையளவாக நிற்கிறது. அச்சிவத்தொடு தொடர்ப்பட்ட சமய உண்மையே சைவ சித்தாந்தமாகும். இச்சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கும் முதல் நூலாக இப்போதுள்ளது சிவஞானபோதமாகும். அச்சிவஞானபோதப் பெருங்கடலின் நிலை கண்டுணர்ந்து, அதற்குப் பேருரைக் கண்டு, சைவ சித்தாந்தப் பெருந் தலைவராய்த் திகழ்ந்தவர் சிவஞான முனிவர் ஆவர். முப்பொருள் உண்மை கூறும் சைவ சித்தாந்தக் கருத்துள் இறைவன் உயர் இயல்புகளை விளக்கிக் காட்டும் சிவஞான முனிவரின் தெளிவுரைகள் கட்டுரையகத்தே அழகு செய்து நிற்கின்றன.) சைவ சித்தாந்தம் என்பது சைவருடைய சமய முடிவு என்று பொருள்தரும் சொற்றொடர். சைவர் யார் என்றால், சைவ சமயத்தை மேற்கொண்டொழுகுபவர். சைவக் கொள்கையுடைய அனைவரும் சைவரே யாவர். சைவரென்னும் சொல் சாதி குலம் வேறுபாடின்றி யாவர் யாவர் சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுகின்றார்களோ அவரவர்களுக்கு உரியதாகும். சைவப் பெரியோர்கள் “ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க” என்றே வற்புறுத்தியுள்ளார்கள். ஆகவே, சைவருடைய சித்தாந்தம் என்றவுடனே, சைவரென்று கூறிக்கொள்ளும் ஒரு சாதியாருடைய கொள்கையென்று எண்ணுவது குற்றமாகும். இவ்வாறு எண்ணும்படியான நிலைமை யுண்டானதற்குத் தவிர அவ்வாறு கூறிக் கொள்பவர்களையோ மற்றவர்களையோ நோவது தவறாகும், அவர்களுக்கு உண்மையை யுள்ளபடி அறிவிப்பது சைவருடைய கடமை. காலமும் கல்வியறிவில்லா மையும் புகுந்து செய்த அட்டுழியத்தால், சைவரிடையே சாதிச் சைவர்களெனவும் உண்மைச் சைவர்களெனவும் பிரிவு உண்டாயிற்று இப்பிரிவால் உண்டான கேடுகள் பல சமுதாயத் துறையில் ஒற்றுமைக் குறைவும் அரசியலில் செல்வாக்குக் குறைவும் ஒருபக்கம் தோன்றி வருத்த, பொருளாதாரத் துறையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடி ரூபாய் கெடுகிறது. இதனைப் பின்னர் விளக்குவோம்.