பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ்ப்பொலிவேடு! 53 உரைக்கு விளக்கம் கூறும் பகுதியில், பாட்டின் சொற் புணர்ப்புக்களில் அமைந்த வினைமுடிபு காட்டிப் பொருளின் திட்டத்தை வரையறுத்து உணர்த்துவதும், அருஞ்சொற்களுக்குப் பொருளும் இலக்கண அமைதியும் கூறுவதும் மிக்க நயம்பொருந்தியுள்ளன. முருக்கமரம் வேனிற்காலத்து மலர்வது பற்றி வேனில்முருக்கு எனப்பட்ட்து", "வேணா, வேட்கை அவா என்ற இருசொற்புணர்ச்சி”, “விசும்பு ஆகுபெயராய் முகின்மேல் நின்றது” என்பன உரைவேந்தரின் உர்ை விளக்கத்துக்குச் சான்று பகரும். இவ்வாறு விளக்குவது முன்னையோர் முறையே: ஆயினும், பாட்டின் இடையே பயிலும் இயற்கைப் பொருள்களின் இயல்புகளை இக்கால விஞ்ஞானக் கருத்துக் களை மேற்கொண்டு உரைப்பது ஒளவையவர்கள் பால் காணப்படும் புதுநெறியாகும். "அறுகாற்பறவை, தேன்வண்டு; வண்டுக்கும் கால் நான்கேயாயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டனையும் கூட்டி அறுகால் என்பது பண்டையோர் கொள்கை” என்பது தெரிகிறது. இனிப் பாட்டின் பொருள்நலம் கண்டு கூறுமிடத்து நமது உரைவேந்தர் சொற்பொருளில் ஆழ்ந்து சென்று காணும் திறம், மிக்க வியப்பும் இன்பமும் தருகிறது. பொருள் குறித்துத் தன் மனைவியின்றும் பிரிந்து செல்ல வேண்டிய நிலையில் அதனைத் தான் விரும்பாதர்ன் போலப் பேசும் தலைமகன், தான் செல்லவிருக்கும் வழியின் இயல்பைக் கூறலுற்று, "பைங்காய் நன்னிறம் ஒரீஇய செங்காய்க் கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி” என்று உரைக்கின்றான். இதனுட்பொதிந்திருக்கும் கருத்தை, "ஈந்து காயா வழிப் பசுமை நிறமும், காய்த்த வழிச்செந்நிறமும், கனியுமிடத்துக் கருநிறமும் பெறும் என்றது, பிள்ளைமையிற் பசுமையும், இளமையில் எழிலும் செம்மையும், முதுமையில் நரையும் திரையும் எய்திக் கழியும் யாக்கையின் நிலையா இயல்பு கூறியது எனக் கொள்க’ என நமது உரைவேந்தர் எடுத்துக் கூறுவர். - பிரிந்துறையும் தலைமகன், வேனிற்பருவம் வரக்கண்டு, “நாட்பத வேனில் இண்ர் துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும், நெஞ்சம்” என்று கூறுகின்றனர். இதனை விளக்கும் நமது உரையாசிரியர், “காவும் சோலையும் கவின்பெறு பொழிலும், புதுத்தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும் புள்ளும் மகிழ்ந்து விளையாட மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற்காலம், காதலிற் பிணிப்புண்ட இளமையுள்ளங்கட்கு இன்பக்காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால், அக்காலத்து மாங்குயிலின்