பக்கம்:உலகத்தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

உலகத் தமிழ்


களைக் கண்டோம். இச்சிறு பாலையில் சோலையமைக்க பெரும்பாடு பட்டுமல்லாது, புது விஞ்ஞான அறிவும் பயன்பட்டிருக்கும். இயற்கைப் பசுமையே காணாத அப் பகுதியில், விஞ்ஞான அறிவின் துணைகொண்டு, பெரும் பணமும் உழைப்பும் செலவழித்து வளர்க்கும் பசுமை தழைத்துப் பரவுவதாக!

டெஹ்ரான் வந்தடைவதற்குமுன், மீண்டும் தண்ணி ஊற்றினார்கள். எந்தத் 'தண்ணி' யும் வேண்டாவென்று மறுத்த என்னை, மேனாட்டுப்பாட்டிகள் இருவர் பரிதாபத்தோடு பார்த்தது தெரிந்தது. பரிதாபப்படட்டும்! நானா குறைந்து விடப்போகிறேன்?

'தண்ணி' போட்டதும் பகல் உணவு பரிமாறினர்கள் அப்பப்பா எத்தனை வகைச் சாப்பாடு! மிளகுத் தண்ணி சூப்பு, சைவப் புலவு, காய்கறிக் குருமா; நான்கு வகைக் காய்கறிப் பதார்த்தம், பூரி; உருளைக்கிழங்கும் பட்டாணியும் கலந்து சமைத்த கறி, தயிர்க் காராபூந்தி: ஐஸ்கிரீம்; பழங்கள், காப்பி அல்லது தேநீர்; பிஸ்கோத்தும் பாலாடையும்; இடைஇடையே 'மது' எவ்வளவு தடுத்தும் கேளாமல், ஒவ்வொரு வகையும்-மது நீங்கலாக-எனக்கும் பரிமாறினர்கள். மாமிச உணவினர்க்கு இதற்கு மேலும்.

சாப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த என் மாணவப் பருவத்தில்கூட இவ்வளவும் சாப்பிட்டிருக்க முடியாது, வயிறு ஒட்டிப்போன இப்போதோ, தொட்டுத்தொட்டுக் கொறித்து விட்டு வைத்து விட்டேன். ஐயோ ஒன்றும் உண்ணவில்லையே. நன்றாக இல்லையோ என்று வருந்தினர் பரிமாறுவோர். இவ்வளவு உணவுப் பொருள்கள் வீணாகிறதே என்று ஏங்கினேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/13&oldid=480374" இலிருந்து மீள்விக்கப்பட்டது